யாழில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவனும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலாளர்,
சமூகப் பாதுகாப்புச் சபையின் ஊடக ஓய்வூதியத் திட்டத்தில் அதிகளவு பயனாளிகளை உள்வாங்கி யாழ் மாவட்டம் 11 தடவைகள் தேசிய விருதிற்கு தெரிவாகியுள்ளது எனவும் இதற்கு பிரதேச செயலர்களின் பங்களிப்பு முக்கியமான காரணம்.
பிரதம விருந்தினரான ஆளுநர் யாழ் மாவட்ட செயலராக கடமையாற்றிய போது, எமது மாவட்டத்திற்கு மேற்கொண்டிருந்த அர்ப்பணிப்பான பணிகளில் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டநடைமுறைப்படுத்தலும் ஒன்றாகும். இவ்வாறான ஒருவர் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருப்பது சிறப்பானது.
தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 138 மாணவர்களிற்கு புலமைபரிசில் வழங்கப்படுகின்றது சிறப்பானது, இதனுள் 4 மாணவர்களிற்கு 50,000 ரூபாவும், 3 மாணவர்களிற்கு 25,000 ரூபாவும், ஏனையோரிற்கு 5,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சமூக பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்கு சிரேஷ்ட இணைப்பாளர் பா.பிரதீபன், வட மாகாண கல்வி பணிப்பாளர் பிறட்லி ஜெராட், வலய கல்வி பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழக பிரமுகர்கள், தேசிய அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர், பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.