சா்வதேமே எங்கள் அழுகுரல் கேளாயோ..? நீதிக்காக கூடியது மாபெரும் மக்கள் சக்தி.

ஆசிரியர் - Admin
சா்வதேமே எங்கள் அழுகுரல் கேளாயோ..? நீதிக்காக கூடியது மாபெரும் மக்கள் சக்தி.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும், இலங்கை விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ். பல்பலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட்ட பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் பேரணி இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியது. 

மதத் தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது மக்கள் எனப் பெருந்திரளானோர் இந்தப் ரேணியில் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், 

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ. கஜேந்திரன் 

மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பால், வயது வேறுபாடின்றி கொழுத்தும் வெயிலிலும் பெருமளவானோர் உணர்ச்சி பொங்கக் கலந்து கொண்டுள்ளனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும் எனச் சாரப்பட்ட கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் தாங்கிச் சென்றனர்.

இணைப்பு : 01

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.யாழில் ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி, முற்றவெளி வரை செல்லவுள்ளது. அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், தமிழர்கள் விடயத்தில் ஐ.நா. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.

இந்த பேரணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு வடக்கு கிழக்கிலுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள் நலன் விரும்பிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய போராட்டம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை யாழ். பல்கலை மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வட. மாகாணம் தழுவிய வாகன பவனி யாழில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டம் முழுவதும் பயணித்த இந்த வாகன பவனி, அதனைத் தொடர்ந்து வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் சென்றிருந்தது.இதனைத்தொடர்ந்து 19ஆம் திகதி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிழக்கில் முன்னெடுக்கப்டவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், குறித்த வாகன பவனி, கிழக்கு நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு