SuperTopAds

"மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்" - வெளியுறவுத்துறை மந்திரி குரேஷி உறுதி!

ஆசிரியர் - Admin

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி ஷா முகமது குரேஷி இன்று காலை, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சேர்ந்த மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார். 

இந்தியா அவருக்கு எதிராக சரியான ஆவணங்களை சமர்ப்பித்து, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அவரை உடனடியாக கைது செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. எனக்கு கிடைத்த தகவலின் படி, அசார் மிகுந்த உடல் நலக் குறைவாகவும், வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் உள்ளார். 

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. எவ்வித ஆதாரமும் இன்றி, அசார் மீது இந்தியா குற்றம் சாட்டுவதால் மட்டும் கைது செய்ய இயலாது. மேலும் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் எந்த அமைப்பினையும் பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை. எந்த ஒரு குற்றத்திற்கும், நடவடிக்கைக்கும் தகுந்த ஆவணம் தேவைப்படுகிறது. இது குறித்து நேரடியாக உரையாடினால் மட்டுமே சரியான தீர்வை எட்ட இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கூறியது. அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

முன்னதாக, உலக பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க இந்தியா கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ஆதரவு நாடான சீனா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முயற்சிகளை தடுத்தது குறிப்பிடத்தக்கது.