காட்டு யானைகளின் அட்டகாசம் கிராமத்தை விட்டே வெளியேறும் மக்கள், அதிகாாிகள் மீது சீற்றம்..
முல்லைத்தீவு மாவட்டத்தில், விசுவமடுப் பகுதியில் தொட்டியடிக் கமக்கார அமைப்பின் பகுதிகளான, டி-3 மற்றும் மேட்டுப்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் காட்டுயானைகள் இரவில் புகுந்து அட்டகாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தாம் வாழிடங்களைவிட்டு வெளியேறவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் தமது நிலைமைகளை தெரியப்படுத்தியதையடுத்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அப்போது அப்பகுதி மக்கள் தமது பகுதிக்கு யானை வேலியை விரைவுபடுத்தி அமைத்துத் தருமாறு ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்பில் தொட்டியடிக் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவரான க.குலசிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
டி-3, தொட்டியடிப் பகுதியில் இரவு 07.00மணி தொடக்கம் யானையின் அட்டகாசததால் மக்கள் குடிபெயரும் நிலையில் இருக்கின்றார்கள்
நாங்கள் வருடாவருடம் தோட்டங்கள் மற்றும் வயல் செய்து, தென்னைகள் வைத்து தொடர்ச்சியாக யானைகள் அழித்துச் செல்கின்றன.
இதை விட யானைகள் இங்குள்ளவர்களை தாக்க முற்பட்ட சம்பவங்களும் உள்ளன.
இதனால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்ததன் விளைவாக உரிய திணைக்களின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டது. அந்தவகையில் இரண்டு மாதங்களுக்கு முன்பதாக வனசஜீவாசிகள் திணைக்களத்தினர் வந்து எமது பகுதிகள் பார்வையிடப்பட்டு,
வேலி அமைப்பதற்குரிய அடையாளப்படுத்தல்களை மேற்கொண்டுவிட்டுச் சென்றார்கள்.
வேலிஅமைத்துத் தருவதாகவும் கூறினார்கள், ஆனாலும் இன்னும் வேலி அமைக்கும் பணிகளில் முன்னேற்றம் எதுவும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.
யானைகளுடைய அட்டகாசமானது தாங்கமுடியாமல் இருக்கின்றது. இதனால் இப்பகுதியில் வசிக்கின்ற குடும்பங்கள் ஒவ்வொருத்தராக வாழிடங்களிலிருந்து வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு விரைவுபடுத்தி யானைவேலியை அமைத்துத்தருமாறு, சம்பந்தப்பட்டவர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கன்றோம் என்றார்.
அப்பகுதி மக்களின் இடர்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
விசுவமடு, தொட்டியடிப் பகுதி இது தவிர டி3, என்று சொல்லக்கூடிய பகுதி, மேட்டுப்பிட்டி என்று என்று சொல்லப்படும் பகுதிகளில் 700ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இப்பகுதிகளில் இரவில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாகவும், தாங்கள் வீட்டிலேயே இருக்க முடியாத நிலையில் பலத்த இடர்பாடுகளுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருவதாக என்னிடம் தெரியப்படுத்தியிருந்தார்கள்.
அந்தவகையில் கடந்த 03.02.2019 அன்று குறித்த பகுதிகளுக்கு நேரில் சென்று சென்று, அங்குள்ள விவசாயிகளுடன் இணைந்து யானைகளால் அப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்பு நிலைமைகளை பார்வையிட்டேன்.
அதேவேளை குறித்த பகுதிகளில் பயிர்ச்செய்கை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், யானைகளால் தமது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதனால், அப்பகுதிகளில் தொடர்ந்தும் மக்கள்வசிக்கமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் பல குடும்பங்கள் அப் பகுதிகளை விட்டு வெளியேறிக்கொண்டிருப்பதாகவும் விவசாயிகள் என்னிடம் முறையிட்டனர்.
இப் பிரச்சினைகளை விவசாயத் திணைக்களம், மற்றும் கமநல சேவைத் திணைக்களம் என்பவற்றிற்கு கமக்காரஅமைப்புகள் தெரியப்படுத்தியும் இதுவரை அவர்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் இந்த மக்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.
கமக்கார அமைப்புகள் உரிய திணைக்களங்களுக்குத் தெரியப்படுத்தியதன் பலனாக வனஜீவராசிகள் திணைக்களத்தினூடாக அங்கு வந்து பார்வையிட்டதாகவும், யானை வேலி அமைப்பதற்கான சில அடயாளப்படுத்தல் வேலைகளையும் செய்துவிட்டுச் சென்றவர்கள் இன்னும் வரவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இனி தாம் யானைகளினால் தமது உயிர்களை இழக்கவேண்டிய நிலை வந்தபின்புதான் வேலி அமைப்பார்களோ தெரியாது எனவும் கூறினர்.
தமது வாழ்வாதாரமானது பயிர்ச்செயகையை மாத்தாரமே நம்பியிருப்பதாகவும், எனவே யானைகளால் பாதிப்புகள் ஏற்படாதவாறு தாம் பயிர்செய்கைகளை மேற்கொள்ள தமக்கு வசதிகள் உடனடியாகச் செய்துதரப்படவேண்டுமென அவர்கள் கேட்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரதேச் செயலகமோ, மாவட்டச் செயலகமோ, அல்லது கமநலசேவைத் திணைக்களங்களோ இது தொடர்பான நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டு இந்த மக்களுடைய துன்பத்தைத் தீர்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
வன ஜீவராசிகள் திணைக்களம் தன்னுடைய வேலைகளைச் செய்யவேண்டும். அவர்கள் இவ்வாறு தமது பணிகளைச் செய்யாமலிருப்பது இந்த மக்களையும், அவர்களது பயிர்ச்செய்கைகளையும் பலி எடுக்கவா என்ற கேள்வி எழுகின்றது.
பல தென்னைகள் யானைகளால் வீழ்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தாம் விவசாயம் செய்யமுடியவில்லையே என்ற ஏக்கத்தோடு இருக்கின்றார்கள்.
இந்தவகையில் நிச்சயமாக இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் பல தொழில்களில்விவசாயம் முக்கியமானது.
விவசாயிகளுடைய இந்த கோரிக்கைக்குச் செவிசாய்த்து, இந்த யானைவேலியை அமைத்து இந்த மக்களுடைய துன்பத்தைத் தீர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.