லண்டனில் இலங்கைத் தூதரகம் முன் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!
இலங்கையின் சுதந்திர தினமான நேற்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக, புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை நேற்று 71 ஆவது சுதந்திரத் தினத்தை கொண்டாடிய நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும் பேரினவாதத்துக்கும் எதிராக பெரும் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தூதரகத்தின் முன் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவிலானோர் ஒன்றுதிரண்டுள்ளதுடன் பறை இசை முழக்கங்களுடனும் த இலங்கை அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.
கடந்த ஆண்டு சுதந்திர தின சம்பவத்தினையடுத்து இம்முறை குறித்த பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.