பிரிகேடியர் பிரியங்க மீதான பிடியாணையை விலக்கக் கூடாது - லண்டனில் போராட்டம்!
போராட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என வலியுறுத்தி லண்டனில் இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் குறுக்கீடு மற்றும் அழுத்தம் காரணமாக இந்த பிடியாணை உத்தரவை வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் திரும்பப் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.