பயங்கர நிலநடுக்கத்தால் குலுங்க போகிறது 2018! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் -
புத்தாண்டு தொடங்கியதுமே 2018ல் நமக்காக காத்திருக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கை பீதியை கிளப்பி உள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ பவுல்டா் பல்கலைக் கழகத்தின் புவியியல் ஆய்வாளா் ரோஜா் பில்ஹாம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
அதில், 2018ம் ஆண்டில் அதிகளவு நிலநடுக்கங்கள் ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள பிற அதிர்ச்சித் தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.
‘பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதன் காரணமாக, மையவிலக்கு விசை குறைந்து, பூமிக்கோளின் பூமத்திய ரேகை இறுக்கமாகும்.
இதனால், பூமித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடையும் அபாயம் உள்ளது. இந்த பாதிப்பால் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் ரிக்டர் அளவில் அதிகபட்சமாக 7 அல்லது 7.5 புள்ளி அளவிலான நிலநடுக்கங்கள் மட்டுமே ஏற்பட்டு வருகின்றன. இந்தாண்டு அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் வரையிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாம்.
இந்தளவுக்கு நிலநடுக்கம் ஏற்படுவது புதிதல்ல. ஏற்கனவே, சிலி, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இதுபோல் நடந்துள்ளது. ஆனால், இந்தாண்டு இதுபோன்ற பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் 20 வரை ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதுதான் பெரிய ஆபத்தாக கருதப்படுகிறது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் ஏற்படும் நிலநடுக்கத்திற்கே கட்டிடங்கள் இடிந்து, ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகின்றனர்.
ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 9 புள்ளிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால், நிலநடுக்கம் உணரப்பட்ட முழு நகரமே தரைமட்டமாகி விடும்.
அதிலும், நிலநடுக்கம் ஏற்பட்ட மையப் பகுதியிலிருந்து சுற்றுப்புறத்தில் 250 கிமீ வரையிலும் அதிர்வலைகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மேற்கு அமெரிக்கா, தெற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், தென் அமெரிக்கா ஆகியவற்றில் இந்த நிலநடுக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் எரிமலைகளும் வெடித்து சிதறும் அபாயமும் ஏற்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.