இந்திய குடியரசு தின விழாவில் ஆண்கள் அணிக்கு தலைமை வகிக்கும் முதல் பெண் ராணுவ அதிகாரி!
26 வயது பாவனா, ஹைதராபாதை சேர்ந்தவர். உஸ்மானியா பல்கலைக்கழக்கத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வீரம் செறிந்த ராணுவத்துறையில் பணிபுரியும் பாவனா, படிப்பில் மட்டும் சுட்டியல்ல, நடனம் மற்றும் இசை என பன்முகத் திறமை கொண்டவர். நடனத்தில் பட்டயப் படிப்பு முடித்திருக்கும் பாவனா, 23 வயது வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். தான் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்று அவர் நினைத்து பார்த்ததில்லை.
நாடு சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதியன்று நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் 144 ஆண் வீரர்கள் கொண்ட ஓர் அணிக்கு தலைமை தாங்கும் முதல் பெண் வீராங்கனை பாவனா. இந்த வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிபிசியிடம் பேசிய இந்திய ராணுவ சேவை கார்ப்ஸின் லெஃப்டினெண்ட் பாவனா கஸ்தூரி தெரிவித்தார்.
"இந்திய ராணுவ சேவை கார்ப்சுக்கு குடியரசு தின அணிவகுப்பில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு 23 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றால், அதை வழி நடத்தும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று பாவனா கஸ்தூரி தெரிவித்தார்.
தனது முன்னேற்றத்திற்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பதாக கூறுகிறார் பாவனா. இருந்தாலும் நீ ஒரு பெண் என்பதை நினைவில் வைத்துக் கொள் என பலர் அவ்வப்போது தனக்கு நினைவுபடுத்துவார்கள் என்பதையும் பதிவு செய்தார் பாவனா கஸ்தூரி. தனது இந்த பயணத்தில் கணவரின் பங்கும் இன்றியமையாதது என்று பாவனா குறிப்பிடுகிறார். பாவனாவின் கணவரும் ராணுவ அதிகாரி என்பதால் தனது பணியில் அவரின் ஊக்கமும் அதிகமாக இருப்பதாக குறிப்பிடுகிறார் பாவனா.
என்.சி.சி-யில் சேர்ந்த பிறகுதான், ராணுவத்தால் பெண்களுக்கான சிறப்பான வாய்ப்புகள் இருப்பதை தெரிந்துக் கொண்ட பாவனா, எல்லாத் துறைகளிலும் சிறப்பாக பணிபுரியும் பெண்கள், ராணுவத்திலும் அதை செய்ய முடியும் என்பதையும் தெரிந்துக் கொண்டதாக கூறுகிறார்.
"...போதும், இனி வேண்டாம்"
சென்னையில் இருக்கும் ராணுவ பயிற்சி அகாடமியில் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. உடலளவிலும், மனதளவிலும் வலுப்படுத்தும் கடுமையான பயிற்சிகள் அங்கு கொடுக்கப்படுகின்றன. தனது பயிற்சி காலத்தை நினைவுகூரும் பாவனா, ராணுவப் பணி கடினமானது, கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால் பயிற்சியும் மிகவும் கடுமையாகவே இருக்கும். பல சமயங்களில் அங்கிருந்து ஓடிவிடலாமா என தோன்றும் என்று சொல்கிறார்.
"18 கிலோ எடை கொண்ட பை மற்றும் கையில் ஒரு துப்பாக்கியை ஏந்திக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் 40 கி.மீ தூரம் ஓடவேண்டும். அந்த நேரத்தில் பயிற்சியில் இருந்து வெளியேறிவிடலாம் என்று மனம் சொன்னாலும், எந்த சந்தர்ப்பத்திலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று புத்தி சொல்லும். இறுதியில் புத்தியே வென்றது'' என்று பழைய நினைவுகளை பகிர்ந்தார் பாவனா கஸ்தூரி.
''பயிற்சி அகாடமியில் இருந்து வெளியேறியதும் நிம்மதியாக இருந்தது. ஒரு சாதாரண மனிதராக அகாடமியில் பயிற்சிக்காக உள்ளே செல்வதற்கும், 11 மாத பயிற்சிக்கு பிறகு ராணுவ அதிகாரியாக வெளியே வருவதற்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. அப்போது பயிற்சியில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போய்விடும்'' என்று சொல்கிறார் பாவனா.
மாதவிலக்கு விடுமுறை
பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் அதற்கான தேவையில்லை என்று கருதுகிறார் பாவனா. ராணுவப் பணியில் இருக்கும் பெண்களைப் பொறுத்தவரை, மாதவிலக்கு என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. ராணுவத்தில் பணிபுரியும் பெண்கள், ஒருவருக்கு மற்றொருவர் பரஸ்பரம் ஆதரவாக இருப்பதாக கூறுகிறார் பாவனா கஸ்தூரி.
"வாழ்க்கை என்பதே ஒரு போர் போன்றது, நாம் அனைவரும் ஏதாவது ஒருவிதத்தில் போரை சந்திக்கிறோம். ஆனால் பிரச்சனைகளை கூறி, கடமையில் இருந்து தப்பிக்க முடியாது. உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் அடைய வேண்டுமானால், மாதவிலக்கு என்பது பிரச்சனையே இல்லை" என்று திடமாக சொல்கிறார் பாவனா கஸ்தூரி.
மூன்றே ஆண்டுகளில் மாறிய வாழ்க்கை
மூன்றாண்டுகளுக்கு முன்னர், ஆடல் பாடல் என ஒரு சாதாரண இளம் பெண்ணாக வலம் வந்த 23 வயது பாவனாவுக்கு குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் மூன்று ஆண்டுகளில் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது, புதிய பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கும் அதிகாரியாக மாறிவிட்டார் பாவனா.
''கடந்த ஆறு மாதங்களாக எனது தினசரி நடைமுறை மிகவும் கடுமையானதாக மாறிவிட்டது. அதற்கு முன்னதாக சற்று நேரம் கிடைக்கும்போது, நடனமாடுவேன், பாடுவேன்.'' ராணுவப் பணி என்பது பெண்களுக்கானதல்ல, ஆண்களுக்கே ஏற்றது என்று பலர் கருதுகின்றனர்.
"ராணுவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் வித்தியாசம் இருக்கிறது என்று சிலர் தவறாக கருதுகிறார்கள். ஆனால் ராணுவத்தை பொறுத்த வரையில், ராணுவத்தில் பணிபுரிவது ஓர் அதிகாரி மட்டுமே; ஆணோ பெண்ணோ அல்ல. நானும் தற்போது நான் கார்கில் பகுதியில் பணிபுரிகிறேன், அங்கு பணிபுரிவது எளிதானது அல்ல" என்று தலை நிமிர்த்தி சொல்கிறார் பாவனா கஸ்தூரி.
''என்னைத் தொடர்ந்து அணி வகுத்து வீரநடை பயிலும் 144 வீரர்களும் என்னுடைய பலம். அவர்களே என்னை ஊக்குவிக்கிறார்கள். அவர்களுடைய உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்ளும். என்னை வலிமையுடன் அவர்களுக்கு முன்னால் அடியெடுத்து வைக்கும் உறுதியை கொடுக்கும் உற்சாகம் அது'' என்று தனது அணியினரைப் பற்றி பெருமையுடன் தலைநிமிர்த்தி சொல்கிறார் லெஃப்டினெண்ட் பாவனா கஸ்தூரி.
thanks photo: bbc