12 சட்டத்தரணிகள் நீதிக்காக போராட்டம், தொல்லியல் திணைக்கள பணிப்பாளரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு..
முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைகள் 24.01.2019 இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி லெனின் குமார் அவர்களின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கடந்த 14ஆந் திகதி அன்று அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்ற வேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த முறுகல் நிலை தொடர்பாக அமைதிக்கு பங்கம் ஏற்ப்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெறவிருந்தது.
எனினும் அவசர நிலையொன்றினை உணர்ந்து, பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் முன் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் மூலம் அது தொடர்பான வழக்கை நேற்று முன்தினம் (22)
நடத்துமாறு கோரியிருந்தனர்.நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில், குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராம மக்களின் சார்பில்
முன்னிலையானவர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலாம் தரப்பாக குறிப்பிடப்பட்ட பௌத்த துறவியை இன்றையதினம் 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்ட விரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை 23.01.2019 நேற்று அவசர அவசரமாக திறந்துவைக்கபட்டது .
இந் நிலையில் குறித்த பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.விசாரணைகளின் முடிவில், முதலாம் தரப்பான பௌத்த பிக்கு சார்பானவர்களிடம் ஊடகவியலாளர்கள்
இன்றைய வழக்கு விசாரணைகள் குறித்து வினவியபோது, அவர்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்ததுடன், இரண்டாம் தரப்பான நீராவிப்பிள்ளையார் கோவில் சார்பாக வாதாடிய 13சட்டத் தரணிகளிடம் இது குறித்து கேட்குமாறும் கூறியிருந்தனர்.
அந்தவகையில் இரண்டாம் தரப்பான நீராவிப் பிள்ளையார் ஆலயம் சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளுள் ஒருவரான சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் இன்றைய நாள் வழக்கு விசாரணைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது,
குறித்த வழக்கில் இன்றைய தினம் இரு பகுதிகள் சார்பிலும் சமர்பணங்கள் மேற்கொள்ளப்பட்டது. முதலாம் தரப்பான பௌத்த பிக்குவின் சார்பில் இன்றைய தினம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றில் தொல்பொருட் திணைக்களம்
அந்தக் குறித்த இடத்தினை தொல்பொருட் திணைக்களத்திற்குரிய பிரதேசமாக அறிவித்ததாக ஒரு ஆவணத்தினையும். குறித்த இடத்திலே கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதி தந்ததான ஒரு ஆவணத்தினையும் சமர்ப்பித்தார்கள்.
அந்த வர்த்தமானிப் பத்திரிக்கையிலே குறித்த இடத்தின் பெயர் செட்டி மலை எனவும், செட்டிமலைக் கிராமம், செட்டிமலை கிராம சேவகர் பிரிவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு இரண்டாம் தரப்பான பிள்ளையார் கோவில் சார்பாக வாதாடிய எம்மால்
அவ்வாறானதொரு இடம் இல்லை எனவும், மேலும் தொல்பொருட் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்திலே எந்தப் பிரதேசம், எந்த இடம், எவ்வளவு விஸ்தீரணம் என்பன இல்லை எனவும்,
எனவே இதற்கு நாங்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் கூறினோம். இதனையடுத்து முதலாம் தரப்பினரான பெளத்த விகாராதிபதி இவ்விடயத்தினை சுமூகமாக தீர்ப்பதற்கு சாத்தியக்கூறு இருப்பதாகவும்,
சுமூகமாக தீர்க விரும்புவதாகவும் கூறிய அடிப்படையில் நீதிமன்றானது தொல்பொருட் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை அடுத்த தவணை மன்றிலே ஆயராகுமாறும் வருகின்ற பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரையில் அந்தக் குறித்த பிரதேசத்திலே முதலாம்
பகுதியினரோ, அல்லது இரண்டாம் பகுதியினரோ எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளோ செய்யக்கூடாதெனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொலிசார் பௌத்த விகாரை அமைத்துள்ள பிக்குவுக்கு சார்பாக செயற்படுகின்றனர் என 2ஆம் தரப்பான
பிள்ளையார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றுக்கு சுட்டிக்காட்டியிருந்த நிலையில் மன்று அதனை ஏற்றுக்கொண்டு பொலிசாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது .குறித்த பிணக்குக்குரிய இடத்திலுள்ள
ஆலயம் மற்றும் விகாரை தொடர்பாக ஒரு சமாதானமான தீர்வு எட்டமுடியுமா என ஆராய்வதற்கும், தேவை ஏற்படின் இரண்டாம் தரப்பான நீராவிப் பிள்ளையார் கோவில் சார்பாக தெரியப்பட்டவர்களின் காரணங்களை
முன்வைப்பதற்கும் நீதி மன்று தவணை வழங்கியுள்ளது என்றார்.