அரசுக்கு சேவகம் செய்து சலுகை பெறுவதை இலக்காக கொண்டவர்கள் மத்தியில் நீதியாக மக்களுக்கு சேவை செய்வோம்.. சீ.வி உறுதி..
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு அங்குரார்ப்பண நிகழ்வும் மத்திய குழு கூட்டமும் இன்று கட்சியின் செயலாளர் நாயகத்தின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் பூரணமான வடிவத்தை தருகிறோம்.
நாம் மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியை தொடங்கியுள்ளோம். ஒருபுறம் எமது மக்கள் கடந்த 30 வருடகால போர்த் தாக்கங்களில் இருந்து இன்னமும் மீண்டுவரமுடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
மறுபுறத்தில் ஏற்கனவே காணப்படும் கட்சிகள் எமது மக்களைப் பிரதிநிதித்துவஞ் செய்வதாகக் கூறிப் போலி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அரசாங்கங்களுக்கு சேவகம் செய்து பதவிகளையும் சலுகைகளையும் பெறுவதே
இலக்காக கொண்டு செயற்பட்டுவருகின்றார்கள். இதனால் மக்கள் ஏமாற்றமும் சலிப்பும் அடைந்திருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு சூழலிலேயே எமது கட்சி ஒரு சிறு குழந்தையாகப் பிரசவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தை விரைவாக எழுந்து நடந்து எம்மக்களின் வேலாகி பாதுகாப்புக் க வசமாகவும் அவர்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் சக்தியாகவும் பரிணாமம் பெறுவது அவசியம்.
அதன் எதிர்காலம் உங்கள் கைகளிலேயே தங்கி இருக்கின்றது. மத்திய குழு உட்பட கட்சியின் ஏனைய அமைப்புக்களில் உறுப்பினர்கள் முழுமையாக இன்னமும் நியமனம் செய்யப்படாமல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் மத்திய குழுவில் 80 சதவீதத்துக்கும் அதிகமான நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொறுப்புக்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கட்சி ரீதியான செயற்பா டுகள் இன்று முதல் ஆரம்பமாகி விரிவடைந்துசெல்லும்போது
பொருத்தமானவர்களை இனம் கண்டு உறுப்பினர்கள் அனைவரையும் அந்தந்தக் குழுக்களுக்கு நாம் மிக விரைவிலேயே நியமிக்க முடியும் என்று நம்புகின்றேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும் துடிப்புடனும்
எமது மக்களின் துயரங்களை நீக்குவதற்கும் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கட்சியில் ஓடாக நின்று பணியாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த கட்சியை ஏன் தொடங்கவேண்டியிருந்தது என்பது சம்பந்தமாகக் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தமிழ் மக்கள் பேரவையில் நான் ஆற்றிய உரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றேன்.
கட்சியின் இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றி எமது யாப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்று எமது யாப்பானது இங்கு வாசித்துக் காட்டப்படும். குறிக்கோள்களை அடைவதற்கு உரிய வழிபடங்களை வரைந்து,
உபாயங்களை வகுத்து, நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும். நோக்கு, உபாயம், செயற்பாடு என்ற மூன்றும் திடமாக வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தினால்த்தான் எமது பயணம் வெற்றியடையும்.
எமது செயற்பாடுகள் தூர நோக்கும், தெளிந்த சிந்தனையும், அரசியல் சாணக்கியமும் கொண்டவையாக அமையவேண்டும். எமது கட்சி மக்களால் வலுப்படுத்தப்பட்ட ஒரு கட்சியாகவும் அடிமட்ட மக்களின் ஆதரவில் தங்கியுள்ள
கட்சியாகவும் கட்டியெழுப்பப்படுவதிலேயே எமது வெற்றி தங்கி இருக்கிறது. எமது மக்கள்தான் இந்தக் கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும். அன்றொருநாள் என்னை வெளியேற்றச் சதிகள் செய்யப்பட்ட போது
'நான் உங்களுடன் நிற்பேன்' என்று என் மக்களுக்கு நான் கொடுத்த என் வாக்குறுதியே இன்று ஒரு கட்சியாகப் பரிணாமம் பெற்றுள்ளது. ஆகவே எம் மக்களின் சிந்தனைகள், ஆலோசனைகள் தாம் எம்மைப் பலப்படுத்தவேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டே எமது கட்சி அடிமட்டத்தில் இருந்து கட்டி எழுப்பப்படும் ஒரு நிறுவன அமைப்பைக் கொண்டிருக்கின்றது. எமது சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு நாம் தீர்க்கலாம்,
எவ்வாறு எல்லா மட்டங்களிலும் உள்ள சமூக அலகுகளை நாம் பிரதிநிதித்துவஞ் செய்யலாம், எவ்வாறு அவர்களை உள்வாங்கி செயற்படலாம் என்ற கேள்விகளை நாம் அடிக்கடி எம்முள்ளேயே கேட்க வேண்டும்.
அவற்றை அவ்வாறு எழுப்பி உங்கள் செயற்பாடுகளை நீங்களே எம்முடன் கருத்துப் பரிமாறி நெறிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். ஒழுக்கமும், துடிப்பும், சமூக சிந்தனையும் உள்ள இளைஞர், யுவதிகளை,
பல்கலைக்கழக மாணவர்களை, முன்னாள் போராளிகளை எம்முடன் இணைத்து செயற்படவேண்டும் என்பதில் நான் கரிசனை காட்டி வருகின்றேன். எம்முடன் இணைந்துள்ள இளைஞர், யுவதிகள்,
பல்கலைக்கழக மாணவர்கள் காலக்கிரமத்தில் பலவற்றைச் சாதித்து காட்டுவார்கள் என்றும் பல விடயங்களில் முன்னுதாரணமாக நடந்து காட்டுவார்கள் என்றும் நான் திடமாக நம்புகின்றேன். என்னைப் போன்றவர்களின்
வாழ் காலம் எத்தருணத்திலேனும் முடிவுக்கு வரக் கூடிய உச்சத்தை எட்டியுள்ளது. அடுத்துவரும் தமிழ்த் தலைமைகள் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, சமூகச் சிந்தனை கொண்டவர்களாக சுயநலம் களைந்தவர்களாக மிளிர வேண்டும்
என்பது எமது எதிர்பார்ப்பு. சமூகத்தின் பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட பலரும் ஒரு கொள்கை அடிப்படையில் இந்தக் கட்சியில் ஒன்று சேர்ந்திருக்கின்றோம்.
ஆனால், கொள்கை ஒன்றென்றாலும் எமது தாகங்கள் வித்தியாசம், வேகங்கள் வித்தியாசம், சூழல்கள் வித்தியாசம். ஆகவே எமது செயற்பாடுகளுக்குள்ளே முரண்பாடுகள் ஏற்படக்கூடும், கருத்துவேற்றுமைகள் ஏற்படக்கூடும்,
சலிப்பு ஏற்படக்கூடும், ஏமாற்றம் வரக்கூடும், நம்பிக்கையீனம் ஏற்படக்கூடும். இந்த சவால்களை எல்லாம் கண்டு துவளாமல் அவற்றையெல்லாம் வெற்றிகரமாகக் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிசெய்யும்
நாளைய தலைவர்களாக நீங்கள் மிளிர்வீர்கள் என்று நம்புகின்றேன். இங்குள்ளவர்களில் வயதில் மூத்தவன் என்ற அடிப்படையில் இவ்வாறான அறை கூவலை விடுக்க நான் தகுதியுடையவன் என்று நினைக்கின்றேன்.
எமது கட்சியின் குறிக்கோள்களை அடைவதற்கான வழிபடங்களை வகுக்கும் கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்களை விரைவில் நாம் ஒழுங்குசெய்வோம். உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அப்போது எதிர்பார்க்கின்றேன்.
முக்கியமாக மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை அறிந்து சொல்லுங்கள். நிலத்தில் காதுவைத்து எமது பயணத்தைத் தொடர்வது அவசியம். நாம் தனியே தேர்தல் அரசியலுடன் நின்றுவிடக் கூடாது.
சிலருக்குத் தேர்தலும், தேர்வும், அது வழியே வரும் அதிகாரங்களும் பதவிகளுமே முக்கியம். எம்மைப் பொறுத்த வரையில் எமது கொள்கைகளை வலுவாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது முக்கியம்.
எமது கொள்கைகள் எமது மக்களின் நீண்ட கால நலம் கருதியவை. ஆகவே நாங்கள் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களை வகுத்து அவற்றின் அடிப்படையில் செயற்படுவது முக்கியம்.
நாம் எம்மை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும். எமது பயணம் மக்கள் நலம் என்ற இலக்கு நோக்கிய பயணமாக அமைய வேண்டும். அந்தப் பயணமே எமது தனித்துவத்தை உலகுக்குப் பறைசாற்ற வேண்டும்.
நாம் எமது அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எமது கருத்துக்கள் சரியானவையாகவும் மக்களைத்
தெளிவுபடுத்துபவைகளாகவும் வலுப்படுத்துபவைகளாகவும் இருக்கவேண்டும். உதாரணத்திற்கு எமது மக்களுட் சிலர் 'நாங்கள் உங்களுக்கு வாக்குகளை அளித்தால் நீங்கள் எங்களுக்கு எதைத் தருவீர்கள்?' என்று கேட்பார்கள்.
அவர்கள் கட்சிகளிடம் இருந்து பிச்சை கேட்டே பழகிப் போனவர்கள். கட்சிகளும் பிச்சை போட்டு பிச்சை கேட்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள். அவர்களிடம் வடகிழக்கு ஒருங்கிணைப்பு,
சமஷ்டி அரசியல் யாப்பு போன்றவை எடுபடா. அவற்றைப் புரிந்து கொள்ளும் மனோநிலை கூட அவர்களுட் பலரிடம் இல்லை. எனவே அவர்கள் வழி சென்று அவர்களுக்கு வருங்காலம் பற்றியும்
எமது நீண்டகாலக் கொள்கைகளின் அவசியம் பற்றியும் எடுத்துக் காட்ட வேண்டும். அதே நேரம் அவர்களின் நாளாந்தத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல, அரசியல் தொடர்பில் ஊடகங்கள் மற்றும்
ஏனையவர்களுடன் கருத்துக்களைப் பகிரும்போது மிகவும் அவதானமாக இருந்துகொள்ளுங்கள். கட்சிக்கு என்று உத்தியோகபூர்வ பேச்சாளர் ஒருவர் இருக்கின்றார். அவர் மிகக் கவனமாக சிந்தித்துச் செயற்படக் கூடியவர்.
ஆதலால் கட்சி சார்ந்த கருத்துக்களை உங்கள் எண்ணப்படி பேசி சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
சில கேள்விகளுக்குப் பதில் நீங்கள் சொல்லியே ஆக வேண்டும் என்றில்லை. அவற்றிற்கான பதில்களைக் கட்சியின் தலைமைகள் கூற விடுவதில் தவறில்லை. அரசியல் ரீதியாக நடத்தப்படும் சில ஊடகங்கள் எங்கள்
மீது சேறு பூசக் காத்து நிற்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. எப்பொழுதும் அவதானமாக இருக்க நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். எமது மத்திய குழுவில் பலவிதமான தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரை உள்ளடக்கியுள்ளோம்.
விவசாய ஒன்றியத்தலைவர், மீனவ சங்கத் தலைவர், வைத்தியர், சட்டத்தரணி, பொறியியலாளர், கட்டடக் கலைஞர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தொழிற்சங்க வாதிகள், கூட்டுறவாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும்
எம்முடன் சேர்ந்து பயணிக்க முன்வந்துள்ளார்கள். பால்நிலை மற்றும் இளைஞர் யுவதிகள் சார்ந்த பிரதி நிதித்துவங்களை வலுவேற்றி வருகின்றோம். எவ்வாறு தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக நடைமுறையில்
உள்ளதோ அதேவாறான சகல மட்ட மக்களினதும் ஆதரவும் எமக்குக் கிடைத்து வருகின்றது. ளுறுசுனு பண்டாரநாயக்க அவர்கள் 1956ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியை அரசியலில் தளர்த்த ஐவகையானோரைத்
தனக்கு ஆதரவாளர்கள் ஆக்கினார். கமக்காரர், மீனவர், ஆசிரியர், சுதேச வைத்தியர்கள் மற்றும் பௌத்த சங்கத்தினரைத் தம்முடன் இணைத்து வெற்றி வாகை சூடினார்.
நாம் மேற்கூறிய பதினொரு வகையானோரை எமது ஆதரவாளர்களாக ஆக்கியுள்ளோம். ஆகவே எந்தத் தேர்தல் ஆனாலும் எமக்கு வெற்றி நிச்சயம்! நாம் எமது கட்சியின் யாப்பைத் தயாரித்து விட்டோம்.
உங்கள் ஒவ்வொருவரிடமும் பிரதிகள் தருவதாக இருந்தது. அதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாங்கள் எமது யாப்பை இந்தக் கூட்டத்திலேயே உங்கள் அனுசரணையுடன் ஏற்க முடிவெடுத்துள்ளோம்.
அதை சற்று நேரத்தில் திரு.அருந்தவபாலன் அவர்கள் முழுமையாக வாசிப்பார். அந்தந்த மாவட்டப் பிரிவுகளின் ஏற்பாட்டாளர்கள் முழுமையாக நியமிக்கப்படாவி ட்டாலும் நியமிக்கப்பட்டோர் பெயர்கள் இப்பொழுது
வாசித்துக் காட்டப்படும். இன்று ஒரு பத்திரிகை எமது கட்சியில் ஜனநாயகம் பேணப்படுமா என்று கேள்வி கேட்டிருந்தது. கட்டாயம் பேணப்படும் என்பதை இப்பொழுதே கூறி வைக்கின்றேன்.
ஆனால் முதல் வருடத்தில் இவ்வாறான நியமனங்கள் செயலாளர் நாயகத்தினா லேயே செய்யப்படுவன. அடுத்த வருடம் தொடக்கம் யாப்பின் அடிப்படையில் வட்டாரம், தொகுதி,
மாவட்டம் என்ற அடிப்படையில் கீழிருந்து நியமனங்கள் செய்யப்பட்டு அவ்வாறு வருபவர்கள் பொதுக் குழுவினுள் உள்ளடக்கப்படுவார்கள். பொதுக்குழு மத்திய குழுவைத் தேர்ந்தெடுக்கும்.
அப்போது என்னை செயலாளர் நாயகமாக நீங்கள் ஏற்க மறுத்தால் உங்கள் ஜனநாயக உரிமையே நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.