ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தினச் செய்தி -

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தினச் செய்தி -
உலகெங்கும் வாழும் உழைக்கும் வர்க்கத்தினர் தமது விடியலுக்காக குரல் எழுப்புகின்ற இன்றைய நாளில் அவர்களுடன் நாமும் இணைந்து கொள்கிறோம்.
தீவைச் சுற்றிக் கடலையும், மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பில் விவசாயத்தையும் பொருந்தோட்டங்களையும் உள்ளடக்கிய எமது நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் உழைக்கும் வர்க்கத்தினராவர்.
பெருந்தோட்டத்துறை மக்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், அரச தனியார்துறை ஊழியர்கள் அனைவரும் இன்றும் தமது உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுக்கின்ற நிலையிலேயே உள்ளனர்.
இடதுசாரிக் கொள்கையுடையவர்கள் என தம்மை நம்ப வைத்ததன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தினதும் உழைக்கும் மக்களினதும் ஏழை மக்களினதும் ஆதரவை பெற்று ஆட்சி அதிகாரத்தை பெற்றவர்கள், தேர்தல் விஞ்ஞாபனங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மறந்து(?) தமக்கு ஆதரவளித்த மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை மூடி மறைத்து வேறு சிந்தனைக்குள் அவர்களை மூழ்க வைக்கும் நடவடிக்கைகளையே பெருமெடுப்பிலான விளம்பரங்களுடன் முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்குக் கிழக்குக் கடற்றொழிலாளர்களின் வாழ்வுரிமையும் தொழிலுரிமையும் உறுதிப்படுத்தப்படவில்லை. பண்ணைத் தொழிலாளர்களுக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை. பொருத்தமற்ற நேரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற உணவுப் பொருட்களினது இறக்குமதிகளாலும் உறுதியான விலை நிர்ணயமின்மையாலும் விவசாயிகள் இழப்பினை சந்தித்து வருகின்றனர். ஜீ.எஸ்.பி வரிச்சலுகைக்கான நிபந்தனைகளின் மறுசீரமைப்பினை இழுத்தடிப்பதால் ஆடை கைத்தொழில் உள்ளிட்ட ஏற்றுமதித் துறை தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டின் மிகப் பெரிய தொழிலாளர் பிரிவான பெருந்தோட்டத் துறையினைச் சார்ந்த மக்கள் தோட்டக் கம்பனிகளின் அடிமைச் சங்கிலிகளில் இருந்து இன்னமும் விடுவிக்கப்படவில்லை, ஏனைய மக்களுக்கு சரிநிகர் சமானமாக அரச நிர்வாகத்துடன் இணைக்கப்படவில்லை. ஆனாலும் மேற்கூறிய விடயங்களின் முன்னேற்றத்திற்காக ஒரு அடி கூட அரசினால் இதுவரை எடுத்து வைக்கப்படவில்லை என்பதே உண்மை.
ஆட்சிக்கு வரும்போது தம்மை அரவணைத்த, பயன்படுத்திய ஆளும் கட்சியினர் தங்களை ஏமாற்றிவிட்டதாக அநேகமான தொழிற்சங்கங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகின்றனர். தொழிற்சங்கங்களின் தேவை, பலம், நோக்கம் என்பவை பற்றி அறியாதவர்கள் அல்ல இன்றைய ஆட்சியாளர்கள். உழைக்கும் வர்க்கத்தினரின் அனைத்துப் பிரச்சினைகளினதும் அனைத்துப் பரிமாணங்களையும் ஆழமாக புரிந்தவர்கள் அவர்கள்.
இந்த நாட்டில் இதுவரை தீர்க்கப்படாத அனைத்துப் பிரச்சினைகளினதும் அடிப்படை, ஜயவர்த்தன அரசினால் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்ட முதலாளித்துவப் பொருளாதார முறைமை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள்கூட அந்த முறைமையை மாற்ற விரும்புவதாக கூறினாலும் மாற்ற முயலவில்லை.
இவ்வாறான நிலைமையே, மாற்றம் ஒன்றே அவசியமானது எனும் அடிப்படையில், இடதுசாரிகள் என நம்பப்பட்ட தேசிய மக்கள் சக்தியை நோக்கி தேசத்தின் மக்களைத் திரளச் செய்தது. ஆனாலும் அதன் பலனை இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினர் இதுவரையிலும் உணர்ந்து கொள்ளவில்லை.
எனவே, தமது உரிமைகள் கிடைக்கும் வரை, நலன்கள் சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்படும்வரை, தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வரை உழைக்கும் மக்கள் எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் எதிராக போராடுவது தவிர்க்க முடியாத தொன்றாகி விட்டது.
தங்களது பொருளாதார, மனித வளங்களின் பலத்தினை, ஆதிக்கத்தை வெளிக்காட்ட இன்றைய தொழிலாளர் தினத்தைப் பயன்படுத்துவதை பெரும்பாலான அரசியல் கட்சிகள் வழக்கமாக்கிக் கொண்டுள்ள நிலையில், கட்சி பேதங்களின்றி, உழைக்கும் மக்கள் கூட்டத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இயலுமானவரை ஒன்றிணைந்து தனித்துவமாக போராட முன்வர வேண்டுமென நாம் அறைகூவல் விடுக்கிறோம். அவ்வாறான போராட்டங்களுக்கு என்றென்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தனது முழுமையான ஆதரவினை வழங்கும்.
ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கமானது தீர்க்கமான சக்திகளில் ஒன்றாக விளங்குமானால் மட்டுமே கௌரவமானதும் நிலையானதுமான தீர்வை அந்தப் போராட்டம் எட்ட முடியும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.
நா. இரட்ணலிங்கம்
செயலாளர்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி