ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும்!

இந்த நாட்டில் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் எந்த அரசாங்கம் வந்தாலும் நீதியைப் பெற்றுத்தரப் போவதில்லையென்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழ் நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 20 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டு.ஊடக அமையம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமனின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் மற்றும் ஊடகவியலாளர் ரஜீவன் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மட்டு ஊடக அமையம் மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பா.அரியநேந்திரன், சுதந்திர ஊடக இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் லக்ஸ்மன் சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட ஊடகவியலாளர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.