உள்ளூர் உற்பத்திகளை நடமாடும் சேவை ஊடாக விற்பனை செய்ய திட்டம்..
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண உள்ளூர் உற்பத்திகளை நடமாடும் சேவைகள் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவியுடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான நடமாடும் விற்பனை சேவையினை நடாத்துகின்றோம். இந்த சேவையானது எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் நடைபெறவுள்ளது.
யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள் , சந்தைகள் போன்ற இடங்களில் இந்த நடமாடும் வ்ரிபனை விற்பனை சேவைகள் இடம்பெறும்.
தற்காலத்தில் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்ரிக் , பொலித்தீன் , போன்ற உக்க முடியாத மூல பொருட்களில் செய்த பொருட்கள் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. அதனால் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. அவற்றை இயன்ற அளவு மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேநேரம் உள்ளூர் உற்பத்திகள் பெருமளவு சந்தைக்கு வருகின்றன.அவற்றுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து , அவற்றை கொள்வனவு செய்வதன் ஊடாகவே உள்ளூர் உற்பத்தியாளர்களை வளர்க்க முடியும் என மேலும் தெரிவித்தார்.