மனுஸ்தீவு அகதிகள் தடுப்பு முகாம் சிக்கல்- மாற்று முகாமிற்கு 8.1 மில்லியன் டாலர்கள் செலவழித்துள்ள ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா/ பப்பு நியூ கினியா: மனுஸ்தீவு லோம்பரம் (Lombrum) கடற்படை தளத்தில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என பப்பு நியூகினியா உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அம்முகாம் கடந்த அக்டோர் 31 அன்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள அகதிகளை East Lorengau என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாற்று முகாமிற்கு செல்ல ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், அம்முகாமை 440 பேர் தங்குமளவு மேம்படுத்த ‘டோல் குரூப்’ என்ற நிறுவனத்திற்கு 8.1 மில்லியன் டாலர்களை ஆஸ்திரேலிய அரசு கட்டணமாக செலுத்தியுள்ளது. 24 நாட்களுக்கான வேலைக்கு இப்பெருந்தொகை செலுத்தப்பட்டுள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. மாற்று முகாமிற்கு ஆகும் செலவு மிகவும் குறைந்தது என ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய வரிப்பணத்திலிருநது மில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 523 மில்லியன் ரூபாய் ஆகும்.
ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்து வரும் கடுமையான குடியேற்றக் கொள்கையின் காரணமாக, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்ற சுமார் 2000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுரு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 600 அகதிகள் மனுஸ் தீவின் லோம்பரம் (Lombrum) கடற்படை தளத்தில் அமைந்துள்ள முகாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மூடப்பட்டுள்ள இம்முகாமிலிருந்து மாற்று முகாமிற்கு செல்ல மறுத்த பத்து நாட்களுக்கு மேலாக அகதிகள் போராட்டம் நடந்து வருகின்றது. மாற்று முகாம் உள்ளூர் வாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என அங்கு இடம்பெயர மறுக்கும் அகதிகள், ஆஸ்திரேலிய அரசிடமிருந்து நிரந்தரமானத் தீர்வைக் கோருகின்றனர். கடந்த அக்டோபர் 31 ஆம் தேதியுடன் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கணக்குப்படி, சுமார் 400 க்கும் மேற்பட்ட அகதிகள் தொடர்ந்து அம்முகாமிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். இப்படி போராடுவதன் மூலம் ‘ஆஸ்திரேலியாவுக்கு வந்து விடலாம்’ என்ற போலியான நம்பிக்கையை அகதிகளுக்குக் கொடுப்பதாக அகதிகளின் வழக்கறிஞர்கள் மீது ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் குற்றம்சாட்டியுள்ளார். இம்முகாமில் உள்ள அகதிகள் ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், இலங்கை, சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.