வடக்கிலுள்ள மருத்துவர்களுக்கு அதிக விடுமுறை எடுக்கும் நோய்! - சுகாதார அமைச்சர் காட்டம்

வடக்கு மாகாணத்திலேயே மருத்துவர்கள் அதிக விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர். இது ஒரு நோய். இந்த நோய் குணப்படுத்த முடியாதளவுக்கு பரவிவிட்டது என தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் வருடக்கணக்கில் இந்த நோயை இழுத்தடிக்காது விரைந்து குணமாக்க முயற்சிக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதாரத் துறை தொடர்பாக அதிக முறைப்பாடுகள் முன்வைக்கப் பட்டன. அதில் எங்குமில்லாதவாறு வடக்கு மாகாணத்தில் தான் மருத்துவர்களின் விடுமுறைக் காலம் அதிகமாக உள்ளது. முன்னைய காலங்களில் ஒன்றுவிட்ட வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை களிலேயே விடுமுறை வழங்கப்பட்டது.
தற்போது மருத்துவர்கள் இரு வாரங்கள் சேவையில் இருந்தால் இரு வாரங்கள் விடுமுறையில் சென்று விடுகின்றனர். இது வடக்கு மாகாணத்திலேயேதான் காணப்படுகின்றது இதனால் பாதிக்கப்படப்போவது எமது மக்களே. இது தொடர்பாக உங்களால் (அமைச்சர் குணசீலன்) நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டுள்ளதா என ஒருங்கிணைப்பு இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்; ”இணைத்தலைவர் கூறிய விடயம் உண்மையானது. எங்களுடைய பாணியில் தெரிவிப்பதானால் இது ஒரு நோய். இந்த நோயை ஆரம்பத்தில் இருந்தே வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அது குணமாக்க முடியாத நிலைக்கு வரமுன்பே நாங்கள் விழிப்புணர்வு அடைந்திருக்கின்றோம். நீங்கள் கூறுவதற்கு முதலே இது தொடர்பில் கடுமையான முயற்சிகளை எடுக்க உள்ளேன் என என்னுடைய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். உடனடியாக பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்பது உண்மை. அதற்காக வருடக்கணக்கில் இந்த நோயை இழுக்க விருப்பமில்லை. ஆகவே இந்த நோயை குணப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இந்த நோயை ஏனைய மாகாணங்களுக்கும் பரவாமல் எமது மாகாணத்தில் இருந்து அகற்றும் பொறுப்பை குணசீலனிடம் ஒப்படைக்கின்றேன் என இணைத்தலைவர் சிவமோகன் தெரிவித்தார்.