சீ.வி.விக்னேஷ்வரனுக்கு பின்னால் செல்லவேண்டிய அவசியம் இல்லை..

ஆசிரியர் - Editor I
சீ.வி.விக்னேஷ்வரனுக்கு பின்னால் செல்லவேண்டிய அவசியம் இல்லை..

முன்னாள் வடமாகாண முதலமைச்சரை நான் எப்போதோ நிராகரித்து விட்டேன் என மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துக்காலாச்சாரம் மற்றும் வடக்கின் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயம் ஒரு சட்ட விரோதமாகும். நான் ஆளும் கட்சியில் இருக்கின்றேனா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனா என்பது கட்சி சார்ந்த விடயம் அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்பதை எனது உரையில் தெரிவித்திருந்தேன்.

நேற்று நடைபெற்றது ஆட்சியில் பெரும்பான்மை இருக்கின்றதா இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பு அல்ல. அது நாடாளுமன்றத்தில் உள்ள தெரிவுக்குழுவை தெரிவு செய்வதற்கான ஒரு கூட்டம்.

அது சட்டவிரோதமாக நடந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வரவுள்ளது. ஆகவே நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னரே நாங்கள் எதையும் சொல்லலாம்.

நீதிமன்றம் ஜனாதிபதி எடுத்த முடிவு தவறானது, தொடர்ந்து நாடாளுமன்றம் தொடர வேண்டும் என்றால், இன்று ஆளும் கட்சியாக இருப்பவர்கள் அதனை நிரூபிப்பார்கள் அல்லது தேர்தல் நடைபெறும்.

இந்நிலையில் அனைத்து கட்சிகளையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கின்ற முன்னாள் முதலமைச்சர் ஈபிடிபியை இணைத்துக்கொள்ள முடியாது என்று கூறியதாக ஊடகவியாலாளர் கேள்வி எழுப்பிய போது,

நான் முன்னாள் முதலமைச்சருக்கு பின்னாலோ முன்னாலோ சென்று எனக்கும் தா என்று கேட்கவில்லை. நான் எப்பொழுதோ அவரை நிராகரித்து விட்டேன். நான் மற்றவர்களை போல் அவரிடம் கேட்டுக்கொண்டு இருந்தால் அவர் சொல்வதில் நிஜாயம் இருக்கும்.

ஆனால் அவரிடம் எப்போதும் நிஜாயம் இருப்பதாக தெரியவில்லை, மேலும் அவரிடம் கூட்டுச்செல்லும் நோக்கம் எப்போதும் இல்லை. இது தொடர்பாக அவரிடம்தான் என்ன கற்பனையில் இதை சொன்னார் என்று கேட்க வேண்டும்.

நான் எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களை விமர்சித்தது கிடையாது. ஆட்சியாளர்கள் ஆட்சியாளர்களாகதான் இருப்பார்கள்.

கரைக்கின்றவன் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல நாங்கள்தான் அந்த ஆட்சியை சரியாக கொண்டு நடாத்த வேண்டும். குறிப்பாக வீட்டுத்திட்டம் மூன்றரை வருடங்களாக இழுபறியில் இருந்த நிலையில் இந்த மாத கடைசியில் அல்லது வரும் மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்க இருக்கின்றோம்.

இவ்வாறான பிரச்சனைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல்தான் இருக்கின்றது. அவ்வாறு தீர்க்கப்படாத பிரச்சனைகளிற்காக தான் இம்மக்கள் என்னை தேடி வந்துள்ளாரகள். ஆற்றில் போட்டு குளத்தில் தேடுவது என்பது பிரச்சனைக்குரியதுதான். எனக் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு