அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனை அடித்து சித்திரவதை செய்த பொலிஸ்.

ஆசிரியர் - Editor I
அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனை அடித்து சித்திரவதை செய்த பொலிஸ்.

எந்தக் குற்றச்சாட்டும் இன்றி இருவரைக் கைது செய்த சுன்னாகம் பொலிஸார் இரவிரவாக கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ளனர். சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக , மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று கடந்த 21 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் சித்திரவதைக்குட்பட்ட நபர் கூறுகையில், “நான் ஏழாலையில் வசிக்கிறேன், சம்பவ தினம் நான் மைதானத்தில் விளையாடி முடித்துவிட்டு எனது மைத்துனரின் முச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தோம். வழியில் சிவில் உடையில் நால்வர் நின்றிருந்தனர். அவர்களின் கையில் தடி, பொல்லுகள் காணப்பட்டது. அப்போது எம்மை வழி மறித்த குறித்த நபர்கள் தம்மை பொலிஸார் என வாய் மூலம் அடையாளப்படுத்திக் கொண்டு, மைத்துனரிடம் முச்சக்கர வண்டிக்கான ஆவணங்களைக் கோரினர்.

மைத்துனர், தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வழங்கிய நிலையில், என்னிடம் தேசிய அடையாள அட்டையை கோரினர். நான், அடையாள அட்டையை உடன் எடுத்து வரவில்லை. வீட்டில் உள்ளது. என தெரிவித்து நான் வீட்டில் இருந்து அடையாள அட்டையை பெற்றுக் காட்ட முற்பட்ட வேளை, அது தேவையில்லை. இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு வாருங்கள். விசாரிக்க வேண்டும் என்று கூறி எம் இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு நாம் செல்லும் போது இரவு 11 மணியாகி விட்டது. அழைத்துச் சென்ற உடனே எதுவித விசாரணையும் இன்றி எனது மைத்துனரை பொலிஸ் நிலைய சமையல் அறைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். என்னை பிறிதொரு இடத்தில் தலைகீழாக கட்டித்தொங்க விட்டு மரக்கட்டை மற்றும் மண்வெட்டி பிடியினால் அடித்தனர்.

அந்த நால்வரில் ஒருவர் மட்டும் தமிழில் உரையாடினார். 'தான் மட்டக்களப்பில் இருந்து சுன்னாகம் வந்துள்ளதாகவும் மட்டக்களப்பை ஒரு கலக்கு கலக்கிவிட்டுதான் வந்தனான், சுன்னாகத்தை ஒரு கலக்கு கலக்காமல் விடமாட்டேன் என்றும் தான் குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி எனவும் கூறித் தாக்கினார்.

“நீ இயக்கத்தில் (தமிழீழ விடுதலைப்புலிகள்) இருந்தனியா? 'ஊருக்க நடக்கிற களவு முழுக்க நீங்கதான் செய்யிறீங்கடா” என கேட்டு சரமாரியாக பொலிஸார் தாக்கினார். சுமார் இரவு 11.30 மணியில் இருந்து அதிகாலை 2.45 மணி வரையில் எம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்பு வெளியில் சென்றவர்கள் மீண்டும் வந்து அதிகாலை 3.30 மணிக்கு எம்மை பொலிஸ் நிலைய மறியல் அறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் விடயம் அறிந்த எனது அண்ணா நள்ளிரவு 12.30 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு சென்று சம்பவம் தொடர்பில் வினவிய போது, அவ்வாறு யாரையும் நாம் கைது செய்யவில்லை. நீங்கள் சென்று காலை வருமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.

மறுநாள் காலை எதுவித விசாரணையும் இல்லாமல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீடும் இல்லாமல் பொலிஸ் பிணையில் நாம் விடுவிக்கப்பட்டோம். வீடு திரும்பிய நாம் உடல் முழுவதும் ஏற்பட்ட கண்டல் காயத்தால், தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருநாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளோம். நாம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற நேரத்தில் உறவினரால் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாண காரியாலயத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதன் பின்னர் வைத்தியசாலைக்கு வந்த இரு பொலிஸார் அந்த 4 பொலிஸாரும் தெரியாமல் தவறிழைத்துவிட்டனர். அவர்களை உங்களிடம் மன்னிப்பு கேட்க வைப்பதாகவும் கூறி சமரசத்துக்கு முற்பட்டனர். நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் பிராந்திய இணைப்பாளர் கருத்து வெளியிடுகையில், “மேற்படி முறைபாடு கிடைக்கப்பெற்றுள்ளமை உண்மை. இது தொடர்பில் முதற்கட்ட நடவடிக்கைகளாக தாக்குதலுக்குள்ளானவரின் வாக்குமூலம் மற்றும் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டுள்ள வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் வாக்குமூலம், சம்பந்தபட்ட பொலிஸ் அதிகாரி ஆகியோரின் வாக்குமூலம் என்பன பதிவு செய்யப்பட்டு அதனைத்தொடர்ந்து எமக்குள்ள அதிகார எல்லையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்த பின்னர் குறித்த இளைஞனின் உடலை குளத்தில் வீசினார்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட அப்போதைய போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஆறு பேருக்கும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கு பத்தாண்டு சிறை தண்டனை

 யாழ்.மேல் நீதிமன்றினால் 2017.05.04ஆம் திகதி விதிக்கபட்டு உள்ளதுடன் , கொலை குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு