காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடாத்திய போராட்டம் : தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என டிரம்பிடம் கோரிக்கை

ஆசிரியர் - Admin
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடாத்திய போராட்டம் : தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என டிரம்பிடம் கோரிக்கை

தமிழர் தாயகத்தில் சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் மகஐரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. 

தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டிறியும் சங்கம் வவுனியாவில் மேற்கொண்டு வருகின்ற சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் 631 ஆவது தினத்தை முன்னிட்டே இப் போராட்டத்தை யாழ்ப்பாணம் நல்லூரில் நடாத்தியுள்ளனர். 

வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் இது வரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து வேறு இடங்களிலும் போராட்டங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்ததன் அடிப்படையிலேயே யாழிலும் போராட்டத்தை நடாத்தியுள்ளனர். 

இதன் போது கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணமல் போன உறவினர்களுக்கு பதிலைக் கூற வேண்டும். அவர்களை விடுவிக்க வேண்டும், தொடர்ந்தும் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்த விடயத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும் தமிழர் தயாகத்தில் சிங்களப் பேரினவாதத்தால் மேற்கொள்ப்படுகின்ற இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். இதுவரையில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர். 

ஆகவே தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளதுடன் மேற்படி கோரிக்கைகள் அடங்கிய மகஐரொன்றையும் யாழிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் கையளித்துள்ளனர். 

நல்லூர் கந்தன் ஆலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் அங்கிருந்து கோவில் வீதியூடாக நாவலர் வீதியைச் சென்றடைந்து அங்குள்ள ஐ.நா அலுவலகத்தில் மேற்படி மகஐரைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப் போராட்டத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு