SuperTopAds

ரஷ்யாவின் முக்கிய இராணுவத் தளத்தின் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆசிரியர் - Editor IV
ரஷ்யாவின் முக்கிய இராணுவத் தளத்தின் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவுக்கு கிழக்கே அமைந்துள்ள முக்கிய இராணுவ வானூர்தித் தளத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஐந்து இராணுவ வானூர்திகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் நிஜ்னி நோவ்கொரோட் பிராந்தியத்தில் அமைந்துள்ள சவாஸ்லெய்கா இராணுவ வானூர்தித் தளத்தின் மீதே புதன்கிழமை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் மூன்று MiG-31 ரக வானூர்திகளும், இரண்டு Su-34 ரக போர் வானூர்திகளும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பில் ரஷ்யா உடனடியாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில் உக்ரைன் அண்மைக்காலமாக நீண்டதூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, லிபிய கடற்பரப்பில் ரஷ்யாவின் இரண்டு கப்பல்கள் மீதும், பின்லாந்து வளைகுடாவில் மற்றுமொரு ரஷ்யக் கப்பல் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், கடந்த வாரம் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தின் வீதிப் பகுதியையும் உக்ரைன் தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம் சேதப்படுத்தியிருந்தது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை ஆரம்பித்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், ரஷ்யாவின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களும், முன்னணிப் பகுதிகளில் உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.

மேலும், ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் 16 ஏவுகணை ஏவுதளங்களை கடந்த சில மாதங்களில் இலக்கு வைத்து தாக்கியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் யெவ்ஹெனி க்மாரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உக்ரைனின் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களால் ஒக்டோபர் மாத இறுதியிலிருந்து ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு அளவு 45 சதவீதத்தால் குறைந்துள்ளதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவும் தனது எரிசக்தி இலக்குகள் மீதான தாக்குதல்களை நிறுத்தினால் மாத்திரமே, ரஷ்யாவின் எரிசக்தி இலக்குகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவோம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

Radio