SuperTopAds

5 சதாப்தங்களாக கடலுக்கடியில் கிடந்த போர்க்கவசம் - வியப்பில் ஆய்வாளர்கள்!

ஆசிரியர் - Editor IV
5 சதாப்தங்களாக கடலுக்கடியில் கிடந்த போர்க்கவசம் - வியப்பில் ஆய்வாளர்கள்!

தெற்கு ஸ்வீடன் கடற்கரைக்கு அப்பால், பால்டிக் கடலில் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான டென்மார்க் அரச போர்க்கப்பலிலிருந்து அரிய வகை போர்க்கவசம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

‘கிரிபின்’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் போர்க்கப்பலின் சிதைவுகள், ஸ்வீடனின் ரோன்னெபி கடற்கரைக்கு அருகிலுள்ள ஸ்டோரா எகோன் தீவின் வடக்கே சுமார் 10 மீற்றர் ஆழத்தில் காணப்படுகின்றன.

கடந்த 1970ஆம் ஆண்டுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தக் கப்பலில், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்சார் தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது, கடந்த ஒக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்ட அகழாய்வில், கப்பலின் முன்பகுதியில் உள்ள போர் மேடைக்குக் கீழே, ஆயுதப் பெட்டிக்கு அருகிலிருந்து இந்தப் போர்க்கவசம் மீட்கப்பட்டுள்ளது.

செப்புக் கலவையால் உருவாக்கப்பட்ட சங்கிலிப் பின்னல் வகையைச் சேர்ந்த இந்தக் கவசம், சுமார் 500 ஆண்டுகளைக் கடந்தும் சிதைவடையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பால்டிக் கடலின் குறைந்த உப்புத்தன்மையும், கடல் புழுக்களின் தாக்கம் இல்லாமையும் இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.

15ஆம் நூற்றாண்டில் டென்மார்க் மன்னர் ஹான்ஸுக்குச் சொந்தமான இந்தப் போர்க்கப்பல், 1495ஆம் ஆண்டு ஸ்வீடன் மன்னருடனான பேச்சுவார்த்தைக்காகப் பயணித்தபோது தீப்பிடித்து வெடித்து மூழ்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அந்தக் கப்பலில் பயணித்த ஜெர்மன் கூலிப்படையினருக்குச் சொந்தமானதாக இந்தப் போர்க்கவசம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பு, அக்காலப் போர்வீரர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கப்பலின் ஆயுதக் கிடங்கு தொடர்பான வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ள முக்கிய ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radio