மதுபோதையில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல், ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல், ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்..

யாழ்.குடத்தனை பகுதியில் நள்ளிரவு வேளை வீடுகளுக்குள் புகுந்த நபர் ஒருவர் வீடுகளில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டது அவர்கள் மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

வடமராட்சி கிழக்கு. குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இன்று அதிகாலை 12 மணி முதல் 4 மணி வரையிலான நேரப்பகுதியில் குறித்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன. 

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை 12 மணியளவில் புகுந்த தாக்குதலாளி வீட்டில் உறக்கத்தில் இருந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) என்பவர் மீதும் அவரது மனைவி ப நிர்மலாதேவி (வயது 53) என்பவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வாள் வெட்டினை மேற்கொண்டு உள்ளார். அதில் பரம்சோதி உயிரிழந்துள்ளார். 

அதேவேளை வீட்டில் இருந்த அறை ஒன்றில் தூங்கிக்கொண்டு இருந்த அவர்களது மகன் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வீட்டில் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் சிறிது நேரம் கழித்து  குறித்த தாக்குதலாளி அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்குள் (மனைவியின் தந்தை ) வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தனது மாமனார் மற்றும் மாமியார் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்கள் மீதும் வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார். 

அதில்  எம். சித்திரவடிவேல் (வயது 50) அவரது மனைவி சி. ஜெயந்தி (வயது 40) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

தனது மாமியார் மீது தாக்குதல் மேற்கொண்டு , வாள் வெட்டினை மேற்கொண்ட பின்னர் "பெட் சீட்டால்" அவரது முகத்தை மூடிக்கட்டி வீட்டில் இருந்து சுமார் 20 மீட்டர் தூரத்திற்குள் நிலத்தில் இழுத்து சென்று அருகில் இருந்த காணிக்குள் அவரை கைவிட்டு சென்றுள்ளார். 

அதேவேளை வீட்டில் இருந்த அறையில் தூங்கிக்கொண்டு இருந்த தனது மனைவி மற்றும் பிள்ளை மீது எவ்வித தாக்குதலையும் தாக்குதலாளி மேற்கொள்ளவில்லை. 

அங்கிருந்து சென்ற தாக்குதலாளி பின்னர் அப்பகுதிகளில் நடமாடி திரிந்த வேளை அயலவர்கள் மின் குமிழ்களை ஒளிரவிட்ட போது சிங்களத்தில் பேசி மின்குமிழ்களை அணைக்குமாறு கூறியுள்ளார். அயலவர்கள் இராணுவம் அல்லது பொலிசாராக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் மின்குமிழ்களை அணைத்து உள்ளனர். 

பின்னர் அதிகாலை 4 மணியளவில் இறுதியாக தாக்குதல் நடத்திய வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ளே வீடொன்றுக்குள் தாக்குதல் நடத்தும் நோக்குடன் தாக்குதலாளி உட்புகுந்த வேளை வீட்டார் விழிப்பாக இருந்தனால் தாக்குதலாளியை அடையாளம் கண்டு விசாரிக்க முற்பட்ட வேளை தாக்குதலாளி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

அதன் பின்னரே அயலில் உள்ள வீடுகளில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றமை அயலவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தாக்குதலுக்கு இலக்கானவர்களை அயலவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

குறித்த தாக்குதலாளி அப்பகுதியை சேர்ந்த தர்சன் எனும் நபர் எனவும் , தாக்குதலுக்கு இலக்கான சித்திர வடிவேல் என்பவரின் மகளை திருமணம் முடித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் , குறித்த தாக்குதலாளி போதை பாவனைக்கு அடிமையானவர் என்பதனால் வீட்டில் குடும்ப தகராறுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை தாக்குதலாளி தாக்குதல் மேற்கொள்ளும் போது போதை பொருள் பாவித்த நிலையில் போதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாலை 4 மணியளவிலேயே பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதிலும் போலீசார் காலை 8 மணிக்கு பிறகே சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

போலீசார் விரைந்து வந்திருந்தால் தாக்குதலாளியை கைது செய்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு