பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் தீர்வே மோதலை முடிவுக்கு கொண்டுவரும் - ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் தீர்வே ஒரே வழி என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை வர்த்தக கப்பல் போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பது தொடர்பில் ஈரான் முன்வைத்த யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈரானின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் வர்த்தக கப்பல் போக்குவரத்துக்காக திறப்பதற்கு ஈரான் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள விரும்புவதாகவும், அதற்கு காரணம் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ட்ரம்பின் கருத்தை தாம் கவனத்தில் எடுத்துள்ளதாகவும், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ மற்றும் இறுதியான பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைகள், கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகளே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரையொட்டி நியூயோர்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போதும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் ஈரான் முன்மொழிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாகச் செல்லும் முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை, பெப்ரவரி மாதம் மோதல் ஆரம்பித்ததிலிருந்து பெருமளவில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய வேண்டுமெனில் போரினால் ஏற்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கையின்மையை முதலில் களைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், ஈரான் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பெசெஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வரும் ஓமான், நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் திறந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் அனைத்து தரப்பினரும் ஓமானுடன் ஒத்துழைக்க வேண்டும் என ஓமான் வெளிவிவகார அமைச்சர் சையித் பத்ர் பின் ஹமத் பின் ஹமூத் அல் புசைதி தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
எனினும், புதிய பொருளாதாரத் தடைகள் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது ஈரானுடன் வர்த்தக உறவுகளைத் தொடரும் முக்கிய நாடுகளின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரானிய எண்ணெயின் மிகப்பெரிய கொள்வனவாளரான சீனா, முன்னைய அமெரிக்கத் தடைகளையும் மீறி ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




