இஸ்ரேல் மீது முழுமையான ஆயுதத் தடையை அறிவித்த ஸ்பெயின் பிரதமர்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைச் செய்து வருவதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியதுடன், இஸ்ரேல் மீது முழுமையான சட்டப்பூர்வ ஆயுதத் தடையை அறிவித்துள்ளார்.
சர்வதேசச் சட்டங்கள் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாக்கவும் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றவும் ஸ்பெயின் அரசுத் தன் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "ஒரு நாட்டைத் தற்காத்துக் கொள்வதற்கும், மருத்துவமனைகள் மீது குண்டுவீசி அப்பாவி மக்களைப் பட்டினி போடுவதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த உத்தரவின் மூலம் இஸ்ரேலுடனான அனைத்து இருதரப்பு ஆயுத ஏற்றுமதி-இறக்குமதிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அல்லது ராணுவ எரிபொருளைக் கொண்டு செல்லும் கப்பல்கள் ஸ்பெயின் துறைமுகங்களைப் பயன்படுத்தவும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.




