அமெரிக்கா தாக்கினால் புதிய ஆயுதங்களை பயன்படுத்துவோம் - ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தால், இதுவரை பயன்படுத்தப்படாத புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய போர் உத்திகளைப் பயன்படுத்தி பதிலடி வழங்கப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடரும் நிலையில், IRGC செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி அல்-அலம் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், நீண்டகால மோதலுக்கு IRGC தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மீண்டும் தாக்குதலை மேற்கொண்டால் தக்க பதிலடி வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், இதுவரை பயன்படுத்தப்படாததாகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் புதிய ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுடனான மோதல் ஏற்பட்டால், அது முந்தைய மோதல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும், புதிய போர் உத்திகள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய போர்த் திறன்கள் உலகையே ஆச்சரியப்படுத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா ஏற்கனவே இடம்பெற்ற மோதலில் தோல்வியடைந்துள்ளதாகவும், அது வரலாற்றுச் சிறப்புமிக்க தோல்வி என்றும் ஈரான் IRGC செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், அந்தத் தோல்வியை அமெரிக்கா ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் IRGC-க்கும் இடையில் அதிகாரபூர்வ அல்லது அதிகாரபூர்வமற்ற உறவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பான விடயங்கள் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் வருவதாகவும், IRGC தனது இராணுவத் தயார்நிலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




