SuperTopAds

பிரான்ஸ், சுவிஸ் நிறுவன சொத்துகளை கையகப்படுத்த விளாடிமிர் புட்டின் அனுமதி!

ஆசிரியர் - Editor IV
பிரான்ஸ், சுவிஸ் நிறுவன சொத்துகளை கையகப்படுத்த விளாடிமிர் புட்டின் அனுமதி!

ரஷ்யாவின் சிவில் மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புகள் மீது உக்ரைன் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு மேலைநாடுகள் ஆதரவளித்து வருவதற்குக் காரணமான, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் ரஷ்யக் கிளைகளை தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சுவிட்சர்லாந்தின் உணவு உற்பத்தி நிறுவனமான நெஸ்லே (Nestle) மற்றும் பிரான்ஸின் பிரபல வர்த்தக நிறுவனங்களான ஓச்சான் (Auchan), லெராய் மெர்லின் (Leroy Merlin) ஆகியவற்றின் ரஷ்ய துணை நிறுவனங்கள் இவ்வாறு தற்காலிக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இத்தீர்மானம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மற்றும் சிவில் பொருளாதார உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் "நட்பற்ற நாடுகளின்" ஐரோப்பிய நிறுவனங்களை இலக்கு வைத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் முல்லியெஸ் (Mulliez) குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ELO குழுமம் மற்றும் ADEO ஆகிய நிறுவனங்கள் மூலம் ஓசான் மற்றும் லெராய் மெர்லின் வர்த்தகங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

உக்ரைனுக்கான பிரதான இராணுவ ஆதரவாளராக பிரான்ஸ் செயற்பட்டு வருவதோடு, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்களுக்குப் பிரெஞ்சு புலனாய்வுத்துறை வழிகாட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளையில், ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளித்துள்ளதுடன், சுவிஸ் தயாரிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் பரிசீலித்து வருகிறது.

லெராய் மெர்லின் (ரஷ்யாவில் லேமனா புரோ - Lemana PRO) நிறுவனத்திற்கு பிரான்ஸிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவே இரண்டாவது பாரிய சந்தையாக விளங்குகிறது. இது 2025 ஆம் ஆண்டில் அதன் உலகளாவிய வருமானத்தில் சுமார் 18.5% பங்களிப்பைக் கொண்டிருந்தது. அதேபோல், நெஸ்லே ரஷ்யா நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு வருமானம் 258 பில்லியன் ரூபிள் (3.06 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்துத் தமக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட நிறுவனங்கள், தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் 2023 சட்டக் கட்டமைப்பின் கீழ், தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படும் சொத்துக்களின் மீதான கட்டுப்பாட்டை வெளிநாட்டு உரிமையாளர்கள் தற்காலிகமாக இழந்தாலும், அவர்களின் உரிமை தன்னிச்சையாக பறிபோய்விடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Radio