போரில் அதிகமான அமெரிக்க சிப்பாய்கள் பலி - வொஷிங்டன் போஸ்ட் செய்தியால் குழப்பம்!

ஈரான் போரில் மத்திய கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைவீரர்களில், பென்டகன் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை விட அதிகமான சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக இராணுவ மூலங்களை மேற்கோள்காட்டி 'வொஷிங்டன் போஸ்ட்' ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பென்டகனின் பாதுகாப்புப் பலியானோர் பகுப்பாய்வு முறைமையின் தரவுத்தளத்தில், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் போர் ஆரம்பித்ததிலிருந்து தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் அல்லாத நிகழ்வுகள் மூலம் 18 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், குறைந்தது 22 இராணுவப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஐந்து மூலங்கள் தெரிவித்துள்ள அதேவேளையில், ஆறாவது மூலமான ஒருவர் இந்த எண்ணிக்கை 23 வரை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மோதல்கள் ஆரம்பமானது முதல் இப்பகுதியில் தங்கியிருந்த 3 அமெரிக்க ஒப்பந்தக்காரர்களும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் போர்ச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்த அறிக்கையை "பொய்" எனக் கூறி மறுத்துள்ளார்.
இப்போரினால் அமெரிக்காவிற்கு செப்டெம்பர் 03 ஆம் திகதி வரை 43.6 பில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக இப்போரினால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கலனுக்கு 5 டொலரை நெருங்கியுள்ளதால் காங்கிரஸில் அரசியல் பிளவுகள் தீவிரமடைந்துள்ளன.
அதேவேளையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்கு ஆதரவாக 600,000 க்கும் அதிகமானோர் தன்னார்வலர்களாகப் பதிந்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




