ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியே களைத்துவிட்டேன்.. என்கிறாா் முதலமைச்சா் சீ.வி.

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியே களைத்துவிட்டேன்.. என்கிறாா் முதலமைச்சா் சீ.வி.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருக்கிறேன். ஆனால் ஆக்கபூர்வமாக ஒன்றும் இன்றுவரை நடக்கவில்லை. என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டம் குறித்தும், அவர்களுடைய விடுதலை குறித்தும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் இன்று முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். 

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக  ஜனாதிபதிக்கு பல கடிதங்களை எழுதியிருக்கின்றேன். 

பல சந்தர்ப்பங்களில் நேரடியாக பேசியிருக்கின்றேன். மீண்டும்.. மீண்டும் அதனை செய்து இப்போது நான் களைத்து போயிருக்கின்றேன் ஜனாதிபதியும் நடவடிக்கைகளை எடுப்பதாக மீண்டும்..மீண்டும் கூறியபோதும் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளாரே தவிர 

அரசியல் கைதிகள் விடயத்தில் ஒரு முழுமையான தீர்வினை காணவில்லை. இதேவேளை அண்மையில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் தலாத அத்துக்கொரல அரசியல் கைதிகள் இந்த நாட்டில் இல்லை. என கூறியிருக்கின்றார்.

அவருடைய கருத்து மிக தவறானது. இன்று சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பிரத்தியேக சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் அந்த சட்டத்தின் கீழ் அவர்களை குற்றவாளிக ள் ஆக்க முடியாது. குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதுகள், வழக்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து குற்றவாளிகள் ஆக்க இயலாது. 

இதனை நான் உச்ச நீதிமன்றில் பல காலங்களுக்கு முன்னரே கூறியுள்ளேன். குறிப்பாக நாகமணி வழக்கு என்ற வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளி ஆக்குவதற்கு முன்னர் அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருக்கும் 

விடயங்கள் உண்மையானவையா? என்பதை தனிப்பட்ட சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தியதன் பின்னதாகவே குற்றவாளியாக அடையாளப்படுத்தலாம். வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு குற்றவாளி ஆக்க இயலாது. 

ஆனால் இங்கு அதுதான் நடந்திருக் கின்றது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது. 

இவ்வாறான நிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் அரசியல் கைதிகளே இல்லை என கூற இயலாது. அரசியல் காரணங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கமான சட்டத்திற்கு மாறான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றுள்ளன. 

சிலர் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்கள் அரசியல் கைதிகள் தான். அதனை எவரும் மறுக்க இயலாது என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு