புனித மக்கா நகருக்கு அருகே ட்ரோன் - இஸ்லாமியரிடையே பிளவை ஏற்படுத்தும் போலி நாடகம் - ஈரான்!

புனித மக்கா நகருக்கு அருகே ஹவுதி அமைப்பின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் சவூதி அரேபியா கூறியுள்ள குற்றச்சாட்டை ஈரான் கடுமையாக மறுத்துள்ளதுடன், போதிய ஆதாரங்கள் இல்லாமல் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மீது பழி சுமத்தக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி இது குறித்துத் தெரிவிக்கையில், புனிதத் தலங்களை அரசியல் ஆக்குவதையோ அல்லது பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதையோ ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தவும், கவனத்தைத் திசைதிருப்பவும் மேற்கொள்ளப்படும் 'போலி நாடகம்' இச்சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இஸ்லாமியத் தலங்களின் புனிதத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.




