SuperTopAds

சர்வதேச பயங்கரவாதத்தைவிட உள்நாட்டு தீவிரவாதமே அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்!

ஆசிரியர் - Editor IV
சர்வதேச பயங்கரவாதத்தைவிட உள்நாட்டு தீவிரவாதமே அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்!

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், சர்வதேச பயங்கரவாதத்தைவிட உள்நாட்டு தீவிரவாதமே அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தலாக இருப்பதாக புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ரொய்ட்டர்ஸ் – இப்சோஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 33 சதவீத அமெரிக்கர்கள் உள்நாட்டு பயங்கரவாதத்தையும், 20 சதவீதம் பேர் வெளிநாட்டு பயங்கரவாதத்தையும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கிய அச்சுறுத்தலாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, 42 சதவீதமானோர் பெருமளவிலான துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட திடீர் வன்முறைச் சம்பவங்களே பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கர்களின் அச்சுறுத்தல் குறித்த பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2013ஆம் ஆண்டில் 21 சதவீதமானோர் மட்டுமே உள்நாட்டு பயங்கரவாதத்தை முக்கிய அச்சுறுத்தலாகக் கருதியிருந்தனர்.

மேலும், சித்தாந்த அடிப்படையிலான தாக்குதல்களைப் பொறுத்தவரையில், வெளிநாட்டு தீவிரவாதிகளைவிட உள்நாட்டு தீவிரவாதிகளே அதிக அச்சுறுத்தலாக இருப்பதாக 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்-கொய்தா நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நீண்டகால இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது.

எனினும், அந்தப் போர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருளாதாரச் செலவுகள் நியாயமானவை அல்ல என பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் போருக்கு 48 சதவீதமும், ஈராக் போருக்கு 51 சதவீதமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் நினைவுகள் இன்னும் அமெரிக்கர்களிடையே வலுவாக இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

குறித்த தாக்குதலுக்குப் பின்னர் வானூர்தி நிலையங்களில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருந்ததாக 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நீதிமன்ற உத்தரவின்றி அமெரிக்க குடிமக்களின் மின்னணு தகவல்களைக் கண்காணிப்பதற்கு 65 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், அமெரிக்கா முழுவதும் 1,167 பெரியவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அமெரிக்காவை ஒன்றிணைத்த முக்கிய நிகழ்வாக இருந்ததாக 75 சதவீதம் பேர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Radio