பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளம் செயலிழப்பு

பொலிஸ் தலைமையகம் மூலம் வழங்கப்படும் பொலிஸ் நற்சான்றிதழ்கள் தொடர்பான தரவுத்தளம் செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களைப் பெறுதல், அறிக்கைகளைக் கோருதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் உள்ளிட்ட பணிகள் தரவுத்தள அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும், குறித்த தரவுத்தளம் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தரவுத்தளத்தை மீண்டும் செயல்படுத்துவதற்காக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், தரவுத்தளம் மீண்டும் வழமைக்கு வரும் வரை பொலிஸ் நற்சான்றிதழுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தரவுத்தளம் மீண்டும் சீராகச் செயல்பட்டவுடன், அனுமதி சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.




