முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடைக் கட்டுப்பாட்டால் சர்ச்சை-கடமையேற்கச் சென்றவர்களுக்கு இடையூறு
நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
எமது செய்தியாளர்
கல்முனை ஆதார வைத்தியசாலையில் (வடக்கு) புதிதாக நியமனம் பெற்று, கடமையேற்பதற்காகச் சென்ற முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடை விவகாரம் தொடர்பாக அங்கு அமைதியின்மை மற்றும் சலசலப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய ஊழியர்கள் கடமையேற்பதற்காகச் சென்றிருந்த வேளையில், அவர்களின் கலாசார ஆடை நடைமுறை தொடர்பாகச் சில தரப்பினரால் இடையூறுகளும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் குறித்த நேரத்தில் கடமையேற்க முடியாமல் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசாங்க ஆடை நடைமுறை:அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஆடை விதிகள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி கலாசார ரீதியான ஆடைகளை அணிவதற்கு அனுமதி உள்ளபோதிலும், இவ்வாறான கெடுபிடிகள் விதிக்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளினதும், மாகாண சுகாதார அமைச்சினதும் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சுமூகமான முறையில் தங்களது கடமைகளை முன்னெடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகமும் சுகாதார அமைச்சும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.