அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் மகசின் சிறைக்கும் பரவியது!

ஆசிரியர் - Admin
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் மகசின் சிறைக்கும் பரவியது!

கொழும்பு மகசின் ​சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும், கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே, இந்த கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள​தாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை,இன்னும் இரண்டொரு நாளில் சாதகமான பதிலை தருவதாக, உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, உறுதியளித்தார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை இன்று சந்தித்து கலந்துரையாடும்போதே, அவர் இவ்வாறு உறுதியளித்தார். இதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டொரு நாளில் சாதகமான பதிலைப் பெற்றுத் தருவதாக கைதிகளிடம் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்‌ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று6ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான ஐயன் என்றழைக்கப்படும் சூரியகாந்தி ஜெயசந்திரன், ஏற்கெனவே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலைச் செய்யப்பட்டவரென தெரியவந்துள்ளது. இது குறித்து, சூரியகாந்தி ஜெயசந்திரனின் தாயார் கருத்துத் தெரிவிக்கையில்,

தனது மகன், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதியன்று புனர்வாழ்வழிக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இராணுவத்தினர் அடிக்கடி தங்களுடைய வீட்டுக்கு வந்து மகனிடம் விசாரணை செய்ததாகத் தெரிவித்த அவர், பின்னர், 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதியன்று தனது மகனை காரணமின்றி ​கைதுசெய்யததாகவும் கூறினார்.

அன்றைய தினம் தனது மகனுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே, மகன் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தனது மகள், பூசாம், கொழும்பிலுள்ள 4ஆம் மாடி ஆகியவற்றுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், தானும் பலமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தனது மகனுக்கு எதிராக 2 வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் ஒன்றில் இருந்து தனது மகன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றைய வழக்கு கிடப்பில் போடப்படப்பட்டு இழுத்தடிக்கப்படுவதாகவும் அவர் கவலை வௌியிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு