சமாதானத்தையும் நல்லுறவையும் இனங்களுக்கிடையில் கட்டியெழுப்ப முன்வாருங்கள்- ஊடக மாநாட்டில் கோரிக்கை முன்வைப்பு
சமாதானத்தையும் நல்லுறவையும் இனங்களுக்கிடையில் கட்டியெழுப்ப முன்வாருங்கள்- ஊடக மாநாட்டில் கோரிக்கை முன்வைப்பு
இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்பும் வகையில் அனைத்து இன மக்களும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டத்தில் உள்ள சமூக தலைவர்கள் ஒன்றிணைந்து சிவில் சமூக சுயாதீன ஊடக மாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட சமூக ஒருங்கிணைப்பினை முன்னெடுப்பதற்கான பிராந்திய மையத்தில் செவ்வாய்க்கிழமை (30) மாலை விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்டத்தில் உள்ள சமூக தலைவர்கள் ஒன்றிணைந்து மேற்கண்டவாறு தத்தமது கருத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்
அண்மைக் காலங்களாக இனங்களுக்கு இடையே பிழையான செய்திகள் பல்வேறு வடிவங்களில் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆதிக்கம் தற்போது எம் சமூகத்தில் அதிகரித்து உள்ள நிலையில் இனங்களுக்கு இடையே பிழையான செய்திகள் அதிகமாக பகிரப்படுகின்றன.இவ்வாறான நிலையில் சரியான தகவலை வழங்க கூடியதாக சிவில் சமூக அமைப்புக்களிடம் உரிய தரப்பினர் உண்மையான செய்திகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக கசப்பான சம்பவங்கள் சமூகங்களிடையே இடம் பெறுவதை தவிர்த்துகொள்ளலாம் .
தற்போது எமது நாடு முகங்கொடுத்து வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையார்களான நாம் மீள வேண்டும் என்றால் நம் செய்ய வேண்டிய ஒரே ஒரு விடயமும் முதன்மையான விடயமும் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்துவதாகும்.இன,மத,பிரதேச ரீதியாக பாதுகாக்கக்கூடிய தனித்துவங்களைப் பாதுகாத்துக்கொண்டு 'நாம் இலங்கையர்' என்ற தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி இலங்கையில் வாழக்கூடிய சகல மக்களும் எவ்வித பாராபட்சமும் இன்றி சமமான மானிட கெளரவத்தையும் சமமான மனித உரிமைகளுக்கு உரித்தாக்கக் கூடிய நவீன சமுகம் ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும்.
நீண்ட கால யுத்தம் முடிவடைந்தாலும் தேர்தல் காலங்களில் இனவாதத்தாலும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் தோன்றும் அராஜக நிலை ஒழுக்க சீலமற்ற எதிர்கால இளைஞர் சமூகத்தையும் ஆத்மீக ரீதியாக மரணமடைந்த நிலையில் எம் மத்தியில் உலாவரும் மனிதர்களையுமே உருவாக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வெண்டும். இது எமது நாட்டிலுள்ள பௌத்த, இந்து ,இஸ்லாமிய, போதனைகளுக்கு எதிரானதாகும்.எனவே இன ஐக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான விடயங்களை சமூகத்தில் விழிப்பூட்டி கடந்த காலம் மற்றும் எதிர்கால தேர்தலை மையமாகக் கொண்டு இடம்பெற்ற அல்லது இடம்பெறும் இனங்களுக்கிடையிலான கசப்பான சம்பவங்களை இல்லாதொழிக்க வேண்டும் . இது தவிர போதைப் பொருள் பாவனைகளால் சமூகங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை களைவதனால் சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஆலோசனைகள் பல முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கல்முனை பகுதியை சேர்ந்த ஐ. இராஜரத்தினம் , எம். ரிலீபா பேகம் , நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த பி. ஜெனிதா ,அட்டாளச்சேனை பகுதியை சேர்ந்த என்.சம்சுதீன் , எச்.ஹாசிம் , கே.எல்.எம். நக்பர் , அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த எம்.வை இர்பான் , வி.சந்திரகுமார் ,சம்மாந்துறை பகுதியை சேர்ந்த ஐ.எல்.எம் நாஸீம் ,உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள சிவில் சமூக தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் மதத் தலைவர்கள் பெண் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை குறிப்பிட்டனர்.
சமூக மட்டத்தில் நல்லுறவை கட்டி எழுப்புதல் எனும் தொனிப்பொருளின் கீழ் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரதேச மட்ட அளவிலான நிகழ்வுகளை அடுத்து மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற இவ் ஊடக மாநாட்டின் போது இன நல்லுறவினை ஏற்படுத்துவதில் சமூக மட்டத்தில் காணப்படும் சமூகப் பிளவுகள் போதைப் பொருட்கள் மற்றும் எதிர்கால சமூக அரசியலை சீர் செய்வதற்கான மாநாடாக இவ் சுயாதீன ஊடக சந்திப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.