யாழ். புன்னாலைக்கட்டுவனில் கொள்ளையில் ஈடுபட்டு வகையாக மாட்டிக் கொண்ட திருடர்கள்: நடந்தது இதுதான்! VIDEO

ஆசிரியர் - Admin

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(14) பட்டப்பகல் வேளையில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த பெறுமதியான தங்கநகைகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு உப அஞ்சல் அலுவலகத்திற்கு அண்மையில் வயது முதிர்ந்த பெண்ணொருவர் கடந்த பல வருடங்களாகத் தனிமையில் வாழ்ந்து வருகிறார். குறித்த பெண்மணி அயற்கிராமமான ஈவினையில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் ஆலய மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற உற்சவத்துக்குச் சென்றுவிட்டு இன்று பிற்பகல்- 12.30 மணியளவில் மீண்டும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

வீட்டின் முன்கதவினைத் திறந்து வீட்டுக்குள் அவர் சென்ற சில நிமிடங்களில் அவர் செல்வதை நோட்டமிட்ட இரு கொள்ளையர்கள் அதே கதவினைத் திறந்து துணிகரமாக வீட்டுக்குள் உள்நுழைந்துள்ளனர்.

குறித்த திருடர்களில் ஒருவன் “கத்தினால் வெட்டுவேன்” எனக் கடுமையாக அச்சுறுத்திக் குறித்த முதிர்ந்த பெண்ணின் வாயைப் பொத்தியவாறு நிற்க மற்றொருவன் அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் காப்பையும், மோதிரத்தையும் அவசர அவசரமாகக் கழற்றியுள்ளான்.

மேலும், கைப்பையில் வைத்திருந்த ஒருதொகைப் பணத்தையும், பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் திருடர்கள் அபகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது காப்புக் கழற்றுவது சிரமமாகவிருந்த காரணத்தால் திருடர்கள் அதனை முறித்து எடுத்துள்ளனர். வாயைப் பொத்திய காரணத்தால் சில நிமிடங்கள் குறித்த பெண் மூச்சு விடுவதில் அவதிக்குள்ளாகியுள்ளார்.

இத்துடன் மாத்திரம் நின்றுவிடாது இதன்போது கோயிலுக்கு அணிந்து சென்ற நகைகள் எங்கே? என வினாவிய கொள்ளையர்கள் குறித்த பெண்ணின் காதுகளில் அணிந்திருந்த தங்கத் தோடுகளை அபகரிக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது குறித்த வீட்டு வளவுக்குள் சிலர் மதிலேறிக் குதிப்பதாக ஈவினை கற்பக விநாயகர் ஆலயத்தில் நின்றிருந்த இளைஞர்களுக்கு அயலவரொருவரால் தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த இளைஞனொருவன் குறித்த வீட்டு உரிமையாளரான பெண்மணியின் பெயர் கூறி அழைத்துள்ளார்.

திடீரெனக் குரல் கேட்டு அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் திருடிய பொருட்களுடன் அங்கிருந்து தலைதெறிக்கத் தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் திருடிய பொருட்களுடன் சென்ற கொள்ளையன் மதிலேறிக் குதித்துத் தப்பியோட முயற்சித்த போது அங்கு வந்த இளைஞன் திருடனைத் தனது கைகளால் மடக்கிப் பிடித்துள்ளார்.

இதனிடையே சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்டு ஈவினைக் கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்தும், அயற் பகுதியிலிருந்தும் குறித்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடியுள்ளனர். அவர்களில் பலரும் கோபமடைந்து திருட்டில் ஈடுபட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

குறித்த இளைஞன் தலையில் ஹெல்மெற் அணிந்தவாறு திருட்டில் ஈடுபட்ட நிலையில் திருடன் அணிந்திருந்த ஹெல்மெற் மக்களின் தாக்குதலால் முற்றாகச் சேதமடைந்தது.

இதனையடுத்து ஈவினை கற்பக விநாயகர் ஆலயச் சூழலில் நின்றிருந்த சுன்னாகம் பொலிஸாருக்குத் திருடன் பிடிபட்ட சம்பவம் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் பிடிபட்ட திருடனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பிடிபட்ட திருடன் வழங்கிய தகவலுக்கமைய மேற்படி வீட்டில் திருட வந்த மேலும் நால்வர் சுன்னாகம் பொலிஸாரால் மடக்கிக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைதான சந்தேகநபர்களுக்கும், அண்மைக் காலமாக குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுக்களுக்குமிடையில் தொடர்பிருக்கலாமெனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(காணொளி:- செ.ரவிசாந்-)

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு