SuperTopAds

ஈரான் மீதான தாக்குதல் - ட்ரம்பின் திடீர் மனமாற்றம் - பின்னணியில் என்ன?

ஆசிரியர் - Editor IV
ஈரான் மீதான தாக்குதல் - ட்ரம்பின் திடீர் மனமாற்றம் - பின்னணியில் என்ன?

ஈரானுக்கு எதிராக  இராணுவத் தாக்குதலை  நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கட்டாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்'சமூக வலைத்தளப் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

தற்போது தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஒரு சிறந்த தலைவர்களாகவும் கூட்டாளிகளாகவும் தங்களது கணிப்பின்படி அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பொருந்தக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படும் என்று அந்த அரபு நாட்டுத் தலைவர்கள் சுட்டிக்காட்டியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மிக முக்கியமாக, இந்த உடன்படிக்கையின் கீழ் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் டிரம்ப் அந்தப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த அரபுத் தலைவர்கள் மீது தாம் கொண்டுள்ள மரியாதையின் அடிப்படையில்,  திட்டமிடப்பட்டிருந்த ஈரான் மீதான தாக்குதலை நடத்த வேண்டாம் எனப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டேனியல் கெய்ன் மற்றும் அமெரிக்க இராணுவத்திற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக, டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், ஈரானுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படாத பட்சத்தில், உடனடியாக முழு அளவிலான பாரிய தாக்குதலை முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Radio