ஐந்து மாதங்களுக்கு மேல் சம்பளமில்லை: வடமராட்சி கிழக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் கடும் விசனம்

ஆசிரியர் - Admin
ஐந்து மாதங்களுக்கு மேல் சம்பளமில்லை: வடமராட்சி கிழக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் கடும் விசனம்

யாழ். வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மேலாக அவர்களது சம்பளம் வழங்கப்படவில்லை என அச்சங்கத்தின் பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே மிகவும் குறைந்த சம்பளத்தை பெறும் தாங்கள் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஐந்து மாதங்களாக சம்பளம் இல்லாமல் பணியாற்ற வேண்டியுள்ளதாகவும், இதற்குத் தமது தலைவர் இயக்குநர் சபை, பொது முகாமையாளர் ஆகியோரது ஆளுமை இல்லாத செயற்பாடுகளே காரணமெனவும் தெரிவிக்கும் பணியாளர்கள் இதனால்,தாம் தங்களது கூட்டுறவுக் கிராமிய வங்கியில் வைப்பிலிட்ட பணத்தைக் கூட முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எமது சங்கம் யுத்த காலத்தில் பல்வேறிடங்களில் இடம்பெயர்ந்து இயங்கியது. இந்நிலையில் கடந்த- 2010 ஆம் ஆண்டு மீள மருதங்கேணியில் கோடிக்கணக்கான சொத்திழந்த நிலையில் இயங்க ஆரம்பித்தது. அப்போது கிராமிய வங்கி மக்களின் சேமிப்பு நிதியைப் பொதுச்சபையின் அனுமதியின்றி மாவட்டக் கூட்டுறவு உதவி ஆணையாளரால் அப்போதைய பிரதேச செயலர் திருலிங்கநாதன் தலைமையில் நியமன இயக்குனர் சபை அமைக்கப்பட்டே மீள இயக்கப்பட்டது.

அப்போது பரந்தன் மக்கள் வங்கியில் கிராமிய வங்கி சேமிப்புப் பணம் 96 இலட்சம் ரூபாவும், மணற்காடுப் பகுதியில் இடப்பெயர்ச்சி காலத்தில் இயங்கிய கிளைகளிலிருந்த சுமார் 25 இலட்சமுமாக சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் கொண்டே எமது சங்கம் மீள இயங்க ஆரம்பித்தது.

தற்போது சுமார் இருபத்தைந்து இலட்சம் வரை சங்கம் கடனில் உள்ளது. இவற்றிற்குச் சரியான பொறுப்புக் கூறல்களில்லை. பல இலட்சங்களுக்குச் சரியான கணக்கு இல்லை. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடாத்தப்பட்டு இயக்குநர் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அப்போது கூடிய பொதுச்சபை நாற்பது இலட்சம் ரூபா காசோலை மோசடிக் குற்றச்சாட்டு உட்படப் பல நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இதற்கு அப்போதைய இயக்குநர் சபையோ அல்லது கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளரோ எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

ஒரு கோடிக்கு மேற்பட்ட பெறுமதி கொண்ட வாகனங்களைத் எமது சங்கம் சரியாகப் பராமரிக்காமல் விட்டுள்ளது. இந்நிலையில் எமது சங்கம் மீண்டும் திறம்பட இயங்குவதானால் உண்மையான சேவை மனப்பான்மை கொண்ட தலைவரும், இயக்குநர் சபையும் காணப்பட வேண்டும்.

ஒரு ஆளுமையான பொறுப்புச் சொல்லக்கூடிய பொதுமுகாமையாளரை நியமிப்பதுடன் சங்கம் தொடர்பில் பொதுச்சபையால் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களைக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரும், கூட்டுறவு அமைச்சும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இருபத்திரண்டு கிளைகள் ஏற்கனவே இயங்கிய நிலையில் தற்போது ஐந்து கிளைகளே இயங்குகின்றன. இதில் இரண்டு கிளைகள் மூடப்படக் கூடிய நிலையில் காணப்படுகின்றன. தற்போது ஐந்துமாதச் சம்பளம் வழங்கப்படாமையால் பல பணியாளர்கள் தமது பணிகளிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு