உலகக் கிண்ண தொடரில் ஈரான் தேசிய அணி பங்கேற்கும் - அந்நாட்டின் கால்பந்து சம்மேளனம் அறிவிப்பு!

ஜூன் மாதம் தொடங்கவுள்ள 2026 கால்பந்து உலகக் கிண்ண தொடரில் ஈரான் தேசிய அணி பங்கேற்கும் என்று அந்நாட்டின் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், தொடரை நடத்தும் நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவிடம் ஈரான் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இதன்படி"நாங்கள் நிச்சயமாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்போம், ஆனால் எங்களது கலாசாரம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் கவலைகளைத் தொடரை நடத்தும் நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும்" என ஈரான் கால்பந்து சம்மேளனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற FIFA மாநாட்டிற்குச் சென்ற ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது இராணுவத் தொடர்புகளைக் காரணம் காட்டி கனடா இந்த நடவடிக்கையை எடுத்தது.
எனவே, உலகக் கிண்ணத்தின் போது வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முறையான பாதுகாப்பு மற்றும் விசா வசதிகளை ஈரான் கோரியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு குறித்து பெரும் சந்தேகம் நிலவியது.
மைதானங்களுக்குள் ஈரானின் அதிகாரப்பூர்வ தேசியக் கொடியை மட்டுமே அனுமதிக்க வேண்டும், தேசிய கீதம் தடையின்றி இசைக்கப்பட வேண்டும் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கால்பந்து தொடர்பான கேள்விகள் மட்டுமே கேட்கப்பட வேண்டும் போன்ற 10 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில், ஈரான் அணி தனது முதல் போட்டியில் ஜூன் 15-ம் திகதி நியூசிலாந்தைச் சந்திக்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகளுடன் மோதவுள்ளது.




