SuperTopAds

ரஷ்யா - யுக்ரைன் யுத்தம் - 3 நாள் போர்நிறுத்தம் அறிவிப்பு - ட்ரம்!

ஆசிரியர் - Editor IV
ரஷ்யா - யுக்ரைன் யுத்தம் - 3 நாள் போர்நிறுத்தம் அறிவிப்பு - ட்ரம்!

ரஷ்யா மற்றும் யுக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் மூன்று நாட்களுக்கு போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மே 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்தப் போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மூன்று நாள் போர்நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ரஷ்ய ஜனாதிபதியின் உதவியாளர் யூரி உஷாகோவ் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான சமீபத்திய தொலைபேசி உரையாடலின் போதே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது இரு நாடுகளும் நட்பு நாடுகளாக இருந்ததை நினைவுகூர்ந்த தலைவர்கள், 'வெற்றி தின' கொண்டாட்டங்களின் போது போர்நிறுத்தத்தை மேற்கொள்வது குறித்து விவாதித்துள்ளனர்

இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக்கொள்ளவுள்ளன. அனைத்து வகையான இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படவுள்ளது.

ரஷ்யா தனது இரண்டாம் உலகப் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ஏற்கனவே இரண்டு நாள் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது.

"ரஷ்யாவுக்கு இது வெற்றி தினக் கொண்டாட்டம், அதேபோல யுக்ரைனுக்கும் இது முக்கியமான நாள்; ஏனெனில் அவர்களும் இரண்டாம் உலகப் போரில் பெரும் பங்கு வகித்தனர்" என்று ட்ரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் நாம் தீர்வை நெருங்கி வருகிறோம்" என்று ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மிக நீண்ட மற்றும் கடினமான இந்தப் போரின் முடிவிற்கான ஆரம்பமாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Radio