முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சலினால் ஒன்பது பேர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மர்மக் காய்ச்சலினால்இதுவரையில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். தொடர்ச்சியான காய்ச்சலின் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 9 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு மற்றும் ஆய்வகத்தின் கவனத்துக்கு அதனை சுகாதாரத் திணைக்களம் கொண்டு சென்றது.
இதனையடுத்தே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,
“இது தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எமது மருத்துவக் குழு முதலில் ஆய்வுகளை மேற்கொண்டது. அதே நேரம் கொழும்பு சுகாதார அமைச்சுக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த இரு தினங்களாக முல்லைத்தீவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சலுக்கு காரணமான வைரஸை அடையாளம் காணும் முயற்சி வேகமாக இடம் பெற்று வருகின்றது – என்றார்.