ஈரான் உச்சத்தலைவர் அயத்தொல்லா அலி கமேனி கொல்லப்பட்டாரா?

ஈரான் உச்சத்தலைவர் அயத்தொல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தகவல்;
மத்திய கிழக்கில் மூண்டது மகா போர்!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மகா போர் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கு இடையே நேரடி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமேனி கொல்லப்பட்டாரா?
ஈரானின் உச்சத்தலைவர் அயத்தொல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், ஈரானியத் தரப்பிலிருந்து இது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
அமெரிக்காவின் நேரடித் தாக்குதல்:
ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரான் மீது 'பாரிய போர் நடவடிக்கைகளை' (Major Combat Operations) ஆரம்பித்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன.
உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள்:
ஈரானின் 24 மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 201 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசென்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாத்திரம் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானின் பதிலடி:
தாக்குதலுக்கு உள்ளான ஈரான், உடனடியாகப் பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஜோர்தான், சவுதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் (US Assets) குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
மழை போல ஏவுகணைகள் பாய்ந்து வருவதால், வான்பரப்பின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மத்திய கிழக்கின் பல நாடுகள் தமது வான்பரப்புகளை அவசரமாக மூடியுள்ளன.




