‘டித்வா’ வால் அநாதையான 103 சிறுவர்கள்

‘டித்வா’ காரணமாக தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் நாட்டில் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்தச் சிறுவர்களின் பராமரிப்பு, கல்வி மற்றும் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பெற்றோரை இழந்த சிறுவர்களை பொறுப்பேற்க பலரும் முன்வந்துள்ளனர், எனினும் அதற்கான நடவடிக்கைகள் முறையான சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும்
அதேவேளை பதுளை மாவட்டத்தில் இளம் வயதில் கர்ப்பமடையும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு மையங்கள் போதியளவில் இல்லை.
அத்துடன் இணையவழி வன்முறைகள், பெற்றோர்களால் பிள்ளைகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகும் மாவட்டமாக பதுளை காணப்படுகிறது என தெரிவித்தார்.




