துமிந்த சில்வா – மஹிந்தானந்தவின் சிறைகளில் கைத்தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் அறைகளிலிருந்து கைத்தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் துமிந்த சில்வா ஆகியோரின் அறைகளிலிருந்து,கண்டெடுக்கப்பட்ட இந்த தொலைபேசிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் K வார்டில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த திடீர் சோதனை நடவடிக்கைகளிலே, இவை கண்டெடுக்கப்பட்டன.
இதன்போது, 16 கையடக்கத் தொலைபேசிகளை கண்டெடுத்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் சிறைத்தண்டனை அனுபவிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் சுமார் 150 கைதிகளுடன் இந்த k வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




