இன்ஸ்டகிராம் தரவு கசிவு? மெட்டா நிறுவனம் விளக்கம்

சுமார் 17.5 மில்லியன் (1.75 கோடி) இன்ஸ்டகிராம் பயனாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக வெளியான செய்திகளை மெட்டா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே தவிர, தரவு கசிவு (Data Breach) அல்ல என்று அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபகாலமாக பல இன்ஸ்டகிராம் பயனாளர்களுக்கு, அவர்கள் கோராத போதிலும் 'கடவுச்சொல்லை மாற்றியமைக்கும்' (Password Reset) மின்னஞ்சல்கள் தானாகவே வந்தன.
இது பயனாளர்கள் மத்தியில் தங்கள் கணக்குகள் ஊடுருவப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் வழங்கிய விளக்கத்தில், வெளிநபர் ஒருவர் சில பயனாளர்களுக்கு கடவுச்சொல் மாற்றும் மின்னஞ்சல்களை அனுப்ப வழிவகுத்த தொழில்நுட்பக் கோளாறு ஒன்று கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மெட்டாவின் சிஸ்டம்கள் எவற்றுள்ளும் ஊடுருவல் நடக்கவில்லை எனவும்,பயனாளர்களின் கணக்குகள் பாதுகாப்பாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பயனாளர்கள் தங்களுக்கு வந்த அந்த தேவையற்ற மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கலாமென்றும், இதற்காக ஏற்பட்ட குழப்பங்களுக்கு நிறுவனம் மன்னிப்பு கோருவதாகவும் மெட்டா நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தனிப்பட்ட தரவுகள் எவையும் திருடப்படவில்லை அல்லது வெளியிடப்படவில்லை என்பதை மெட்டா உறுதிப்படுத்தியுள்ளது.
உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட இன்ஸ்டகிராம், பாதுகாப்பு விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.




