வடகிழக்கில் நாளை முதல் கனமழை

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் தோன்றிய காற்றுச் சுழற்சி தற்போது தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது.
இக்காற்றுச்சுழற்சிக்கு தேவையான மறை வெப்பச் சக்தியின் பற்றாக்குறையால் இது எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் மிக மிக மெதுவாக நகர்ந்து நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலையாக விருத்தி பெற்றுள்ளது.
இது மேலும் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, இலங்கைக் தெற்காக நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றுச் சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை முதல் 12ஆம் திகதி வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியங்கள் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
அதே வேளை கிழக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகளில் பலநாட் கலங்களில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்களும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.




