80 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு

இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த சுமார் 470 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடின் மையப்பகுதியில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் இருந்து குறித்த வெடிகுண்டு மீட்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வெடிகுண்டை நிபுணர்கள் இன்று பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். இந்த வெடிகுண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட AN-M44 வகையை சேர்ந்ததாக கூறப்படுகிறது
கடந்த 1944 -ஆம் ஆண்டு, நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் இருந்த பெல்கிரேடை விடுவிப்பதற்காக நேச நாட்டுப் படைகள் ஜெர்மனி முகாம்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலின் போது இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 80 ஆண்டுகளாக வெடிக்காமல் மண்ணுக்குள் புதைந்து கிடந்த இந்த குண்டு, தற்போது கட்டுமானப் பணியின் போது வெளிவந்துள்ளது.
குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஒரு பெரிய வணிக வளாகத்திற்கு அருகில் இந்த குண்டு கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், வாகனங்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட இந்த வெடிகுண்டு, பெல்கிரேடில் இருந்து சுமார் 180 கி.மீ தொலைவில் உள்ள இராணுவப் பயிற்சி மைதானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.




