தாமதமாகும் காசா மாணவர்களின் கனவு- இஸ்ரேல் மீது கனடா குற்றச்சாட்டு

காசா பகுதிக்கு, கல்வி கற்க உதவி செய்ய வேறு சில நாடுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டாலும், சுமார் 130க்கும் மேற்பட்ட காசா மாணவர்களுக்கு விசா வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்குக் காரணம் இஸ்ரேலிய அதிகாரிகளே என்று கனடா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் போரினால் காசாவில் தனது படிப்பைத் தொடர முடியாத நிலையில், சோண்டோஸ் என்ற மாணவி கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முதுகலை நிர்வாகப் படிப்பிற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முயற்சித்தார்
குறித்த விண்ணப்பிப்பதற்கு நிலையான இணைய இணைப்பைத் தேடி, காசா நகரில் பல கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று, ஒரு மணல் தெருவில் வலிமையான Wi-Fi கிடைத்த இடத்தைக் கண்டுபிடித்தார்.
அவர் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த அன்றே, அங்கிருந்து கிளம்பும் நேரத்தில், இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேலியத் தாக்குதல் நடந்தது. "நான் ஓடத் தொடங்கி தரையில் விழுந்தேன்; சிதறிய குண்டுகளின் துண்டுகளும் இரத்தமும் எங்கும் இருந்தன" என்று சோண்டோஸ், பிபிசியிடம் நினைவு கூர்ந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி, பல்கலைக்கழகத்தின் உலகளாவிய நிர்வாகத்திற்கான முதுகலைத் திட்டத்தில் தனக்கு அனுமதி கிடைத்த செய்தியை சோண்டோஸ் பெற்றார். "நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் பொருட்டு போர் தனது ஆயுதங்களைக் கீழே வைத்தது போல உணர்ந்தேன். என்னுடைய இதயம் மீண்டும் ஒளியால் பிரகாசித்தது," என்று குண்டு வெடிப்புகளால் ஒளியூட்டப்பட்ட வானம் தனக்கு வேறு வகையான ஒளியைத் தந்ததாக அவர் உணர்வுபூர்வமாகக் கூறினார்.
சோண்டோஸ் ஒரு மனித உரிமை சட்டத்தரணியாக, உலக அரங்கில் பாலஸ்தீன மக்களுக்குப் பிரதிநிதியாக வேண்டும் என்று கனவு காண்கிறார். போர் அவரது பல்கலைக்கழகத்தை அழித்த பிறகு, வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு அவருக்கு ஒரு அரிய நம்பிக்கையை அளித்தது.
எவ்வாறாயினும், வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்ற சோண்டோஸ் உள்ளிட்ட சுமார் 130க்கும் மேற்பட்ட காசா மாணவர்கள், கனடாவுக்கான விசாவுக்காக இன்னும் காத்திருக்கிறார்கள். அவர்களால் காசாவில் இருந்து வெளியேற முடியவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் இலாப நோக்கற்ற அமைப்பான 'ஆபத்தில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மற்றும் அறிஞர்கள்' (Palestinian Students and Scholars at Risk) மூலம் பல மாணவர்கள் உதவி கோரியுள்ளனர்.
ஆனால் சிலருக்கு, இந்த காத்திருப்பு துயரமாக முடிந்தது. வாட்டர்லூ பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரட்டைச் சகோதரிகளான தாலியா மற்றும் சாலி ஆகியோர், 2024 டிசம்பர் 5 ஆம் திகதியன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகப் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
எவ்வாறாயினும், மாணவர்களுக்காக ஒட்டாவாவில் வாதாடி வரும் பேராசிரியர் நதியா அபு-சஹ்ரா, உயிரியல் அளவீடுகள் (biometrics) மற்றும் பின்னணிச் சரிபார்ப்புகள் (background checks), காசாவிலிருந்து வெளியேற்றுவதில் உள்ள சிரமங்கள் ஆகியவையே தாமதத்திற்குக் காரணம் என கனடாவின் அதிகாரிகள் கூறுவதைச் சாக்குப்போக்குகள் என்று மறுக்கிறார்.
"மாணவர்களுக்கு உதவ இந்தக் கட்டமைப்புத் தடைகளை மற்ற நாடுகள் ஏற்கனவே நீக்கிவிட்டன. எனவே கனடாவின் நிலைப்பாடு நியாயப்படுத்த முடியாததாகிறது" என்று அவர் கூறுகிறார்.
பிரித்தானியா, இத்தாலி, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே காசா மாணவர்களை வெளியேற்றி, வெளிநாட்டில் தங்கள் படிப்பைத் தொடர வழிவகை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




