இந்தியாவில் டொனால்ட் ட்ரம்பின் மகன் காதலியுடன் நடனம்-வைரலாகும் காணொளி

அமெரிக்கப் பில்லியனர்களான பத்மஜா மற்றும் ரம ராஜு மன்டேனாவின் மகள் நேத்ரா மன்டேனாவுக்கும், சூப்பரார்டர் நிறுவனத்தின் இணை நிறுவுனர் வம்சி கதிராஜுக்கும் இந்தியாவின் ராஜஸ்தானின் உதய்பூரில் திருமண விழா இடம்பெறுகிறது.
இந்த ஆடம்பரத் திருமண விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகனான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் தனது காதலி பெட்டினா ஆண்டர்சனுடன் பங்கேற்றார்.
மூன்று நாள் கொண்டாட்டத்தில் (21) அன்று நடைபெற்ற சங்கேத் விழாவை திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹார் தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவில் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் உள்ளிட்ட பல பொலிவூட் நட்சத்திரங்கள் நடனமாடினர். குறிப்பாக, நடிகர் ரன்வீர் சிங் தனது "வாட் ஜும்கா?" பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, உற்சாக மிகுதியில் ட்ரம்ப் ஜூனியரையும் பெட்டினா ஆண்டர்சனையும் மேடைக்கு இழுத்து ஹிந்திப் பாடலுக்கு நடனமாட வைத்தார்.
இந்தத் தன்னிச்சையான நடனத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதேநேரம், இந்த திருமணத்தில் இந்தியக் கலைஞர்களுடன், சர்வதேச பொப் நட்சத்திரங்களான ஜெனிஃபர் லோபஸ் மற்றும் ஜஸ்டின் பீபர் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




