கோவை விமான படைத்தளத்துக்கு சொந்தமான தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது...

துபாய் விமான கண்காட்சியில் தமிழ்நாட்டில் கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தைச் சேர்ந்த தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.
துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி விமான கண்காட்சி 2025 தொடங்கியது. விமான கண்காட்சியின் கடைசி நாளான நேற்று இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடி இருந்தனர். இதில் தமிழ்நாட்டின் கோவை சூலூர் படைப்பிரிவில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வரும் தேஜாஸ் போர் விமானமும் கண்காட்சியில் பங்கேற்றது.
தேஜாஸ் போர் விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைதானத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. துபாய் நேரப்படி பிற்பகல் 2.15 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் விமானி பலியானார்.




