SuperTopAds

மோசடி ராணிக்கு சிறை -படுத்துக்கொண்டே பணக்காரர் ஆகுங்கள் திட்டம் அம்பலம்

ஆசிரியர் - Editor IV
மோசடி ராணிக்கு சிறை -படுத்துக்கொண்டே பணக்காரர் ஆகுங்கள் திட்டம் அம்பலம்

சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றி, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணிக்கு பிரிட்டனில் பணமோசடி வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 இது கடந்த 2021ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றுள்ளார்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், அவ்வளவு பெரிய தொகையை லண்டனில் முதலீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

 இருப்பினும் , அவர் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை. 

 தொடர்ந்து, கியான் வாடகைக்கு எடுத்திருந்த லண்டன் வீட்டில் 2018இல் லண்டன் காவல்துறை (Metropolitan Police) சோதனை நடத்தியபோது, 61,000 பிட்காயின்களைக் கொண்ட ஹார்ட் டிரைவ்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

 அந்த கிரிமினல் சொத்துக்களின் மதிப்பு 50,000 கோடி ரூபாய்க்கும் மேலாகும். 

மேலும், ஸ்வீடனில் கோட்டை ஒன்றை வாங்க வேண்டும், லிபர்லாந்து ராணியாக வேண்டும் என்று எழுதி வைத்திருந்த டைரி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர். 

 யாடி ஷாங் என்ற பெயரிலிருந்த அந்தப் பெண்ணிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியபோது, சீனாவைச் சேர்ந்த ஷிமின் கியான், 47 என்பது தெரியவந்தது. 

 அவர் சீனாவிலிருந்து தப்பி லண்டனுக்கு வந்த தலைமறைவு குற்றவாளி என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

 சீனாவில், லான்தியன் கெருய் (Lantian Gerui) என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ஷிமின் கியான், முதியோர், ஓய்வூதியதாரர்களைக் குறிவைத்து கிரிப்டோ கரன்சி மோசடியை அரங்கேற்றியுள்ளார். 

படுத்துக் கொண்டிருக்கும்போதே பணக்காரர் ஆகுங்கள்' என்று ஆசையை தூண்டி ஒரு இலட்சம் பேருக்கு மேல் முதலீடு செய்ய வைத்துள்ளார். கடந்த, 2017இல் திட்டம் சரிய ஆரம்பித்ததும், சீன அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்தனர். 

 அதன்பின்னர் போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டுத் தப்பியோடி, லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். 

 கிரிமினல் சொத்துக்களை (பிட்காயின்) சட்டவிரோதமாகப் பெற்றது மற்றும் வைத்திருந்தது ஆகிய குற்றங்களை கியான் ஒப்புக் கொண்டுள்ளார். 

 தொடர்ந்து அவருக்குப் பணமோசடி வழக்கில் 11 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

 இந்நிலையில் , திருடப்பட்ட சொத்துக்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பி அளிப்பதற்கான இழப்பீட்டுத் திட்டம் குறித்து, பிரிட்டன் அதிகாரிகள் தற்போது சிவில் நடவடிக்கைகளில் பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Radio