விண்வெளியில் புதிய திட்டம்- காற்று மற்றும் சிறுநீரில் இருந்து உணவு தயாரிக்க முயற்சி

விண்வெளி வீரர்கள் உண்பதற்குத் தேவையான உணவை உருவாக்குவதில் உள்ள பெரும் சவாலைச் சமாளிக்க ஐரோப்பா ஒரு புதுமையான திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, காற்றில் இருந்தும் (thin air), விண்வெளி வீரர்களின் சிறுநீரில் இருந்தும் உணவு தயாரிப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தொடங்கியுள்ளது
நீண்ட கால விண்வெளிப் பயணங்கள், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களின்போது உணவுத் தேவையைச் சமாளிக்கக் கூடிய நிலையான உணவு உற்பத்தி முறையை உருவாக்குவதே HOBI-WAN என்ற இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
"மனித விண்வெளிப் பயணத்தின் மீள்திறன் மற்றும் விண்வெளி வீரர்களின் நலன் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு முக்கிய வளத்தை உருவாக்குவதே இந்தப் திட்டத்தின் இலக்கு, என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் ஏஞ்சலிக் வான் ஓம்பர்கன் அறிவித்துள்ளார்.
மேலும் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகங்களுடன் விண்வெளியில் உயிர்வாழ இந்தத் தீர்வுகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பின்லாந்தைச் சேர்ந்த உணவுத் தொழில்நுட்ப நிறுவனமான சோலார் ஃபுட்ஸ் (Solar Foods), சோலின் (Solein) எனப்படும் ஒரு பல்துறைப் புரதத் தூளை உருவாக்கியுள்ளது.
நுண்ணுயிரிகள், காற்று மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்தி வாயு நொதித்தல் (gas fermentation) செயல்முறை மூலம் இந்தப் புரதம் உருவாக்கப்படுகிறது.
பூமியில் உள்ள சோதனையின் போது, இதற்கான நைதரசன் மூலமாகச் சிறிதளவு அம்மோனியா பயன்படுத்தப்பட்டது.
ஆனால் விண்வெளியில், இந்த நைதரசன் மூலமாக யூரியா (Urea) பயன்படுத்தப்படும், இது விண்வெளி வீரர்களின் சிறுநீரில் இருந்து பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், எதிர்கால நீண்ட கால விண்வெளிப் பயணங்களில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான முக்கியப் படியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




